Last Updated : 24 Jun, 2019 11:24 AM

 

Published : 24 Jun 2019 11:24 AM
Last Updated : 24 Jun 2019 11:24 AM

பைக் திருடியதாக இளைஞரைத் தாக்கிய கும்பல்: ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி அடித்ததால் மரணம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே முஸ்லிம் இளைஞர் ஒருவர் பைக் திருடியதாக சந்தேகப்பட்டு அவரைக் கடுமையாகத் தாக்கிய கும்பல் அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமன் என்று கூற கட்டாயப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

ஜாம்ஷெட்பூர் அருகே சீரேய்கேலா-கர்சாவன் பகுதியைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் தப்ரிஸ் (வயது22). கடந்த செவ்வாய்கிழமை மாலை பைக் திருடிவிட்டதாக ஒரு கும்பல் தப்ரிஸைப் பிடித்தனர். தப்ரிஸைக் கட்டிவைத்து, அந்த கும்பல் காட்டுமிராண்டித்தனமாக 7 மணிநேரம் தாக்கினர். அதுமட்டுமல்லாமல் தாக்கும்போது ஜெய்ஸ்ரீராம், ஜெய்அனுமன் ஆகிய வாசகங்களைக் கூறுமாறு அந்த கும்பல் தப்ரிஸை கொடுமைப்படுத்தினர்.

இதை பலரும் வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பரப்பினர். இத்தகவல் போலீஸாருக்குக் கிடைத்த பின், அவர்கள் வந்து தப்ரிஸை, அந்த கும்பலிடம் இருந்து புதன்கிழமை மீட்டனர். மீட்கப்படும்போது அவர் சுயநினைவில்லாமல் இருந்தார்.

அதன்பின், தப்ரிஸை ஜாம்ஷெட்பூரில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, தப்ரிஸ் உயிரிழந்தார்.

இந்நிலையில் தப்ரிஸின் உடலை வாங்க முடியாது என்று நேற்று அவரின் உறவினர்கள் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதன்பின் போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்டு, சமாதானப் பேச்சில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "அந்த கும்பலிடம் இருந்து தப்ரிஸை மீட்கும்போதே அவர் சுயநினைவின்றி இருந்தார். அதன்பின் நாங்கள் டாடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் உயிரிழந்தார். தப்ரிஸ் உறவினர்கள் புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் " எனத் தெரிவித்தனர்.

தப்ரிஸ் இறப்பு குறித்து அவரின் உறவினர்கள் தரப்பில் கூறுகையில், "கடந்த செவ்வாய்க்கிழமை நானும், தப்பிஸும் சென்றபோது ஒரு பைக் திருட்டு நடந்தது. அந்த பைக் திருட்டை தப்ரிஸ்தான் செய்தார் என்று அந்த கும்பல் அவரைப் பிடித்துத் தாக்கினர். காயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க போலீஸாரிடம் தெரிவித்தோம்.

ஆனால், அதற்கு போலீஸார் உடன்படவில்லை. தப்ரிஸை சந்திக்க போலீஸார் எங்களை அனுமதிக்கவில்லை. எங்களையும் கைது செய்து சிறையில் அடைப்பதாக போலீஸார் மிரட்டினர். தப்ரிஸ் உடல் நிலை மோசமடைந்து, வேறு மருத்துவமனைக்கு மாற்றிய தகவலைக் கூட போலீஸார் எங்களிடம் கூறவில்லை.

எங்கள் மகன் தப்ரிஸ் மரணத்துக்குக் காரணமான போலீஸார், கிராம மக்கள், அவரைத் தாக்கியவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் " எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x