Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM
முஸ்லிம்களின் வாக்குகளை கவர பல்வேறு அரசியல் கட்சிகள் ரம்ஜான் மாதத்தில் இப்தார் நடத்துவது வழக்கம். உ.பி.யில் நிலவிய காங்கிரஸ் ஆட்சியில் முதல் அமைச்சராக இருந்த ஹேமவதி நந்தன் பகுகுணாவால் இப்தார் நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது.
இது டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் பரவி மதநல்லிணக்க நிகழ்ச்சியாக அனைத்து அரசியல் கட்சிகளும் அதனை நடத்தி வந்தனர். பிறகு, அதன் பின்னணியில் முஸ்லிம் வாக்குகளை பெறும் வகையில் சில மாநில அரசுகளும் அதை நடத்தி வந்தன.
ஆனால், கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கிய ரம்ஜான் மாதத்தில் இந்த வருடம் உ.பி.யில் எந்த அரசியல் கட்சியும் இப்தார் விருந்துகளை இதுவரை நடத்தவில்லை. கடந்த 40 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுபோல் முதன்முறையாக நடைபெற்றுள்ளது.
ரம்ஜான் நோன்புகள் துவங்கியபோது மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி இருந்தது. தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த எதிர்க்கட்சிகள், இப்தார் விருந்தை இதுவரை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
முஸ்லிம் வாக்குகளை முக்கியமாகக் கருதி வரும் அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் கூட இன்னும் இப்தார் நடத்தாமல் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சமாஜ்வாதியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி கூறுகையில்,"தேர்தல் பணியால் இப்தார் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. நோன்புகள் முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால் அதற்குள் நடத்த முயல்வோம்" எனத் தெரிவித்தார்.
மாயாவதி தன் கட்சி சார்பில் இப்தார் நிகழ்ச்சியை ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்துவது வழக்கம். முஸ்லிம்களுக்கு மட்டுமே அதில் அழைப்பு விடுக்கப்படும். இதனிடையே, இவரது கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த நசீமுத்தீன் சித்திக்கீ, காங்கிரஸில் இணைந்து விட்டதால், இப்தார் நிகழ்ச்சியை முன்னின்று நடத்த மாயாவதியுடன் எவரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸின் மாநிலத் தலைவரான நடிகர் ராஜ்பப்பர், தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிடம் நிதிப்பற்றாக்குறையும் இருந்து வருகிறது. டெல்லியிலும் காங்கிரஸ் கட்சி இன்னும் இப்தார் விருந்தை நடத்தாமல் உள்ளது.
உ.பி.யை முன்மாதிரியாக கொண்டே தேசிய அரசியல் கட்சிகளும் டெல்லியில் இப்தார் துவக்கி நடத்தி வந்தனர். இதில் முக்கியக் கட்சியான காங்கிரஸும் இதுவரை இப்தார் நிகழ்ச்சியை நடத்தாமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT