Published : 11 Jun 2019 02:39 PM
Last Updated : 11 Jun 2019 02:39 PM
நாயுடுவை வீழ்த்தி ஆந்திராவை ஜெயித்த உற்சாகத் துள்ளலில் இருக்கிறார் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா. காமதேனு பேட்டிக்காகப் பேச வேண்டும் என்று சொன்னதும் “ஜெகன் சார்கூட எல்லாரும் கோயிலுக்குப் போய்ட்டு இருக்கோம். திரும்பி வந்ததும் நானே லைனில் வர்றேனே” என்றவர், மதியம் 3 மணிக்கு, ‘குட் ஈவினிங் சார்’ என்று மெசேஜ் அனுப் பினார். உடன் தொடர்பு கொண்டேன். காரில் பயணித்தபடியே எனது கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.
சட்டமன்றத்துக்கு 151 தொகுதிகள், மக்களவைக்கு 23 தொகுதிகள்... ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் இந்த இமாலய வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கடந்த முறையே இந்த வெற்றி எங்களுக்குக் கைக்கு எட்டியிருக்க வேண்டும். ஆனால், மோடி, பவன் கல்யாண் இவங்ககூட சேர்ந்துக்கிட்டு சந்திரபாபு நாயுடு குடுத்த பொய்யான வாக்குறுதிகளை ஜனங்க அப்ப நம்பிட்டாங்க. அந்த நேரத்துல ஜெகன் சின்னப்பையன்; இவரால எதுவும் செய்ய முடியாது, நாயுடுதான் நல்லது செய்வாருனு ஜனங்க நம்புனாங்க. ஆனா, கடந்த அஞ்சு வருசத்துல தன்னோட குடும்ப சம்பாத்தியத்தை உயர்த்திக்கிட்டதும் மகனை மந்திரியாக்கி ஊழல் பண்ணியதும் தான் நாயுடு செஞ்ச சாதனை.
இந்த வாட்டி ஜனங்க ஜெகன் சாரை நல்லாவே புரிஞ்சுக்கிட்டாங்க. அதை பாதயாத்திரை போனப்பவே எங்களால உணர முடிஞ்சுது. ஸ்டேட்டுக்காக இவர் ஏதாச்சும் நல்லது செய்வார்ங்கிற நம்பிக்கையில தான் ஜனங்க எங்களுக்கு இவ்வளவு மெஜாரிட்டி குடுத்துருக்காங்க. அதை உணர்ந்துதான், “என் மீது ஆந்திர மக்கள் நிறைய நம்பிக்கை வெச்சிருக்காங்க. நான் சொன்னதை எல்லாம் அவங்களுக்கு செஞ்சு குடுத்துட்டுத்தான் அடுத்த தேர்தலுக்கு அவங்கட்ட ஓட்டுக்கேட்டுப் போவேன்”னு ஜெகன் சார் சொல்லிருக்கார். நிச்சயம் அதையெல்லாம் செஞ்சு குடுப்பார். ஆந்திராவில் ஊழலற்ற ஆட்சி நடக்கும்.
இந்த வெற்றிக்குக் காரணம் நாயுடு மீதுள்ள வெறுப்பா... ரெட்டி மீதுள்ள நம்பிக்கையா?
ரெட்டி சார் மீதுள்ள நம்பிக்கைதான். ஏன்னா... ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் ஜெகன் சார் போராடிய விதத்தை ஜனங்க பாத்தாங்களே... அதனால அவரோட அப்பா மாதிரி இவரும் நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை வந்திருச்சு. அந்த நம்பிக்கையைக் குலைக்க கடைசி நேரத்தில் ஓட்டுக்காக அரசாங்கப் பணத்தை எடுத்து லஞ்சமா கொடுத்தார் நாயுடு. ஆனா, அவரு என்ன செய்தாலும் அவருக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு ஜனங்க டிசைட் பண்ணிட்டாங்க.
ஆந்திராவை முன்னேற்ற என்ன கொள்கைத் திட்டம் வைத்திருக்கிறது உங்களது கட்சி?
நாலு தபாவா லிக்கரை ஒழிக்கிறது முக்கிய அஜென்டா. மத்திய அரசுகிட்ட போராடியாச்சும் ஸ்டேட்டுக்கு சிறப்பு அந்தஸ்து வாங்குவது அடுத்த பிளான். இதில்லாம ஜெகன் சார் அறிவிச்ச ஒன்பது நவரத்தின திட்டங்கள்ல இருக்கிற மற்ற விஷயங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பது. செகரட்ரியேட்டைத் தேடி எல்லாரும் அமராவதிக்கு வருவதைத் தவிர்க்க மண்டல வாரியாக மினி செகரட்ரியேட்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது, அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டமும் இருக்கு.
இதுக்கெல்லாம் நிதி ஆதாரம் வேண்டுமே?
உண்மைதான். தெலங்கானா பிரியும்போது உலக வங்கியில் ஆந்திரத்துக்கு 97 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அதை இரண்டரை லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் நாயுடு செய்த ஒரே சாதனை. இதையெல்லாம் சீர்படுத்தித்தான் ஆந்திர ஜனங்களுக்கு நாங்கள் நல்ல திட்டங்கள குடுக்கணும்.
நீங்களும் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் இருக்கா, இல்லையா?
போன எலெக்ஷன்லயே அது இங்க ஜீரோ ஆகிருச்சே!
காங்கிரஸின் தோல்விக்கு ராகுல்காந்திதான் காரணம் என்பது சரியா?
நிச்சயமா. அவருடைய திறமையின்மைதான் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம். அது தெரிந்துதானே அவர் ராஜினாமா
செய்திருக்கிறார். ராஜினாமாவை அவரது பார்ட்டிக்காரர்கள் வேண்டுமானால் நிராகரிக்கலாம். ஆனா, வெளியிலிருக்க யாரும் ராஜினாமா செய்தது தவறுன்னு சொல்ல மாட்டாங்க.
மோடி மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் நினைப்பது இருக்கட்டும்... பிரஜா கோர்ட்னு சொல்ற மக்கள் மன்றம் சொன்ன பிறகு நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவர் தவறு செய்தால் அதற்கு ஒருநாள் பதில் சொல்லித்தான் ஆகணும்; இப்ப நாயுடு சொல்ற மாதிரி. ஜனங்க நம்மள பார்த்துட்டு இருக்காங்கன்ற பயபக்தி எல்லாருக்கும் இருக்கணும். அப்படி இல்லாட்டி போனா அவங்க ஒருநாள் நம்மள ஓங்கி அடிச்சு உட்கார வெச்சிருவாங்க. அப்புறம் எந்திரிக்கவே முடியாது.
சந்திரபாபு நாயுடுகூட மூன்றாவது அணி அமைப்பதற்காக தேசம் சுற்றி வந்தாரே?
காலியாக இருக்கும்போது எல்லாரையும் இப்படித்தான் அவரு நோண்டிட்டு இருப்பாரு. ஏன்னா... வீட்டுல அவரால சும்மா உக்காந்துருக்க முடியாது. அதனால மூன்றாவது அணின்ற பேருல எல்லா ஸ்டேட்டையும் சுத்திப் பாத்துட்டு வந்தாரு.
மோடி - அமித் ஷா கூட்டணியின் வியூகம் தான் பாஜக வெற்றிக்குக் காரணம்னு சொல்றாங்களே..?
பிஜேபி பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது. ஏன்னா... எங்க ஸ்டேட்ல பிஜேபி ஒண்ணுமே இல்ல. அதனால அதப்பத்தி கண்டுக்கிறதில்ல.
பெண் ஆளுமைகளான மம்தா, மாயாவதி கூட இந்தத் தேர்தல்ல சரிவைச் சந்திச்சிருக்காங்களே..?
அது நாயுடு ராசி. இவரோட கைகுலுக்குனதோட விளைவு இவரோட கெட்ட நேரம் அவங்களயும் தொத்திக்கிருச்சு. நாயுடு காலடி எடுத்து வெச்ச இடமெல்லாம் நாசமாப் போச்சு.
பாஜகவுடன் சந்திரபாபு நாயுடு மறைமுக உறவு வைத்திருப்பதாக ஏற்கெனவே நீங்கள் சொன்னீர்கள். ஆனால், இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தால் நீங்கள்தான் பாஜகவை நெருங்குவது போல் தெரிகிறதே?
பாஜகவுக்கும் நாயுடுவுக்கும் உறவு இல்லைன்னு இப்பக்கூட நமக்கு உறுதியா தெரியாது. ஏன்னா... நாயுடு, தப்பு மேல தப்பா பண்ணியும் அவரு மேல சென்ட்ரல் ஒரு கேஸ்கூட போடலியே. அப்டீன்னா என்ன சொல்ல முடியும்... சொல்லுங்க? ஆனா, நாங்க ஒண்ணும் பிஜேபிய நெருங்கல. ஆரம்பத்துலருந்தே அந்தக் கட்சியோட நாங்க போராடிக்கிட்டுத்தான் இருக்கோம். “சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்துக்காக எதையுமே கேட்கலை”ன்னு பிரதமர் மோடி பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கார். நாளைக்கு எங்களையும் அப்படிச் சொல்லிடக் கூடாதுன்னுதான் இப்ப ஜெகன் சார் மோடி சாரை சந்திச்சு ஆந்திரத்துக்கான தேவைகளை எடுத்துச் சொல்லிட்டு வந்திருக்கிறார். அதேசமயம் ஆந்திராவின் நன்மைக்காக மத்திய அரசுடன் போராட வேண்டிய சூழல் வந்தால் மோடியுடன் மோதவும் தயங்க மாட்டோம்.
ஜெகன் ஆட்சியில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடுமா?
கண்டிப்பாக. அதற்கான முழு முயற்சியும் எடுப்போம். எங்களுக்கு ரொம்ப வேலை வைக்காம மோடி சார் குடுத்துருவார்னு நம்புறோம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
ஆந்திர, தமிழக அரசியலில் எப்போதும் சினிமா கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இந்த முறை பவன் கல்யாண் போட்டியிட்ட இரண்டு இடத்திலும் தோற்றிருக்கிறார். உங்களது வாக்கு வித்தியாசம்கூட குறைவாகிவிட்டது. சினிமா கவர்ச்சி அரசியல் ஆந்திரத்திலும் அஸ்தமிக்கிறதா?
சினிமா கவர்ச்சி இருக்கத்தான் செய்யுது. ஆனால், அதுவே பொலிடிக்கலா வரும்போது நம்பகத்தன்மை வரணும். அந்த நம்பிக்கை பவனோட அண்ணன் மேல கொஞ்சமாச்சும் இருந்துச்சு. ஆனா, இவரு மேல அதுவும் இல்ல. என்னோட கதையே வேற. நான் மீண்டும் ஜெயித்து சட்டமன்றத்துக்குள் வரக் கூடாது என்று நாயுடு சபதமே செய்தார். அதற்காக எனது தொகுதிக்குள் அனைத்து உத்திகளையும் கையில் எடுத்தார். அதையெல்லாம் தாண்டி நான் ஜெயிச்சிருக்கேன்னா ஜனங்க என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை என்னைக்கும் நான் கெடுத்துக்க மாட்டேன்.
ஜெகன் அமைச்சரவையில் ரோஜா உள்துறை அல்லது மின் துறைக்கு அமைச்சராவார் என்கிறார்களே..?
அதுபற்றி எனக்குத் தெரியாது. அமைச்சரவையில் இடம் கொடுத்தால் சந்தோஷம்.
சிரிப்புடன் விடைகொடுக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT