Published : 27 Jun 2019 10:25 AM
Last Updated : 27 Jun 2019 10:25 AM
உ.பி.யில் மெகா கூட்டணி முறிந்ததால் வரும் தேர்தல்களில் பாஜக பலன் பெறும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலை வருங்காலத்திலும் பல ஆண்டுகள் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகள் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. இங்கு எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவதால் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக பலன் பெறும் நிலையும் நிலவியது. இதை முறியடித்து வெற்றி பெற அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மாயாவதியின் பகுஜன் சமாஜும்(பிஎஸ்பி), அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும் (எஸ்பி) இணைந்து மெகா கூட்டணி அமைத்தன.
இதில் அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியைச் சேர்த்தவர்கள் காங்கிரஸை விலக்கி வைத்தனர். எனினும், அதன் முடிவுகள் அதிர வைக்கும் வகையில் எஸ்பிக்கு முன்பை விடக் குறைவாக ஐந்து கிடைத்தது. பிஎஸ்பிக்கு பத்து தொகுதிகளும் காங்கிரஸுக்கு ஒரே ஒரு தொகுதியும் கிட்டின. எனினும், பாஜக 62 தொகுதிகளிலும், அதன் கூட்டணியான அப்னா தளம் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதனால், மிகவும் அதிருப்தி அடைந்த மாயாவதி, இனி உ.பி.யில் தனித்தே போட்டியிட இருப்பதாகக் கூறி மெகா கூட்டணியை முறித்தார். இதனால், பாஜக முன்பை விட அதிகமான பலன்பெறும் எனக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் எஸ்பியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''கூட்டணிகட்சிகளின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்காமல் போனது முக்கியக் காரணம். இத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான நிலையால் பாஜக உ.பி.யில் முன்பை விட வலுவாகி விட்டது. இந்த நிலை வரும் காலங்களில் பல வருடங்கள் தொடரும் வாய்ப்புகள் உள்ளன'' எனத் தெரிவித்தனர்.
2017-ல் அகிலேஷ், உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காகக் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். 2019-ல் அதனிடம் இருந்து விலகி மாயாவதியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தார். இவ்விரு தேர்தல்களிலும் அகிலேஷ் கட்சிக்குப் படுதோல்வி ஏற்பட்டது. இதனால், அடுத்து வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவைக்கான 12 தொகுதிகளின் இடைத்தேர்தலில் பிஎஸ்பியும், எஸ்பியும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதன் 11 எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
2018-ல் நிகழ்ந்த மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் கிடைத்த பிஎஸ்பியின் ஆதரவால் எஸ்பி மூன்றிலும் வெற்றி பெற்றது. இத்துடன் நடைபெற்ற சட்டப்பேரவையின் ஒரு தொகுதியும் அகிலேஷுக்கு கிடைத்தது. இதன் தாக்கத்தில் மக்களவைத் தேர்தலில் உருவான மெகா கூட்டணி மாயாவதிக்கு மட்டும் ஓரளவிற்கு பலன் அளித்துள்ளது. இனி பழையபடி இருவரும் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு பாஜகவிற்கு முன்பை விட அதிக பலன் அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆர்எல்டியின் தலைவர் அஜீத் சிங் மட்டும் அகிலேஷுடனான கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார். இவர் கடந்த காலங்களில் பாஜக, எஸ்பி, பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ் என நான்கு கட்சிகளுடனும் மாறி, மாறி கூட்டணி வைக்கும் வழக்கம் உள்ளவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT