Published : 01 Jun 2019 04:52 PM
Last Updated : 01 Jun 2019 04:52 PM
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடர வலியுறுத்தி பல்வேறு தலித் செயற்பாட்டாளர்கள் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெய் கிஷன், "ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு சரியானதாகக் கூட இருக்கலாம், ஆனால் அவர் மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது ராகுல் ராஜினாமா செய்தால் அது அநீதி இழைபதாகிவிடும். தொண்டர்களும் ஏமாற்றமடைவார்கள். அதனால் ராகுல் ராஜினாமா செய்து எங்களை வருத்தத்தில் ஆழ்த்தக் கூடாது.
தேர்தலில் கட்சியடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே காரணமாக முடியாது. கட்சித் தொண்டர்கள் அனைவருமே இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
இப்போதைக்கு ராகுல் காந்திக்கு மாற்று யாருமில்லை. அதனால், பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைப்பதற்கு இது நிச்சயமாக சரியான தருணம் அல்ல" என்றார்.
தர்ணாவில் ஈடுபட்ட மற்றொரு தலித் செயற்பாட்டாளர் ஆர்.ஜோஷி, "ராகுல் காந்தியின் அரசியல் திறமை மீது எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. நேரு காலத்திலிருந்து அந்தக் குடும்பம் தேசத்துக்காக செய்த தியாகங்கள் என்னவென்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் ராகுலே காங்கிரஸ் தலைவராகத் தொடர வேண்டும் எனக் கோருகிறோம்.
தேர்தல் ஒரு விளையாட்டைப் போன்றது. சில நேரம் வெற்றி வரும் சில நேரம் தோல்வி கிட்டும். அது பெரிய பிரச்சினையே இல்லை. ராகுலால் நம் தேசத்தை காக்க முடியும். சமூகத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்ல விரும்பாதவர்களுன் கையிலிருந்து தேசத்தை ராகுலால் மட்டுமே காக்க இயலும்" என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், பாஜக தனித்தே 303 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT