Published : 01 Jun 2019 03:34 PM
Last Updated : 01 Jun 2019 03:34 PM
வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி வாக்கில் தென் கரையை தொடும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி எம்.மொஹாபத்ரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இப்போதைக்கு பருவமழைக் காற்று அரபிக் கடலில் கடைக்கோடி தென் பகுதியைத் தொட்டிருக்கிறது. தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடலிலும், அந்தமான் கடலிலும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு மூன்று தினங்களில் அரபிக்கடலின் மேலும் சில பகுதிகளை எட்டும்.
இதனால் ஜூன் 6-ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது" என்றார்.
முன்னதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் எனக் கூறியிருந்தது.
தென்மேற்கு பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 70 சதவீத வருடாந்திர மழை கிடைக்கிறது. தென் மேற்கு பருவ மழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மூன்று முதல் 5 நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களிலும் தென் தீபகற்பத்தின் கடைக்கோடி பகுதி இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை இப்போதைக்கு மழை வாய்ப்பு இல்லை. 46 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே வெப்பம் நீடிக்கலாம்.
டெல்லியைத் தவிர உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் அனல் காற்று வீசியது. வெள்ளிக்கிழமையன்று மேற்கு ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் மிக அதிகபட்சமாக 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தென் இந்தியாவில் ஆந்திரா, தெலங்கானாவில் வெப்பக் காற்று வீசியது.
பருவமழை தொடங்கியதும் அனல்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறு ஆறுதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT