Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

கோயில் சிலைகள், தொல்பொருட்கள் எண்ணிக்கையை தமிழக அரசு பதிவு செய்ய வேண்டும்: மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கருத்து

தமிழகத்தின் கோயில்களில் உள்ள சிலைகள், தொல்பொருட்கள் எண்ணிக்கையை அந்த மாநில அரசு பதிவு செய்ய வேண்டும் என மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார். திமுக உறுப்பினர்கனிமொழியின் கேள்விக்கு அவர் மக்களவையில் இந்த பதிலை அளித்தார்.

நேற்று மக்களவையின் கேள்வி நேரத்தின்போது கேரள மாநிலம் கோழிக்கோடு தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ராகவன், மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேலிடம் ஒரு கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பிரகலாத் விரிவான பதில் அளித்தார்.

தனது பதிலில் அமைச்சர் பிரகலாத் கூறும்போது, ‘‘வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்திய கலைப் பொருட்கள் மற்றும் நகைகள் குறித்த தரவுகள் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில் எதுவுமில்லை. இதனால் நாடுகள் குறித்த தகவல் தேவையற்றது. அதே சமயத்தில் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பழமையான சின்னங்களையும் தொல் பொருட்களையும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நடவடிக்கை எடுத்து மீட்டு வருகிறது” என்றார்.

மேலும் அமைச்சர் பிரகலாத் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட உலோகம் மற்றும் கற்கால பழமையான சின்னங்களையும் தொல்பொருட்களின் பட்டியலையும், எந்த நாட்டிலிருந்து அந்தப் பொருட்கள் மீட்கப்பட்டது என்ற பட்டியலையும் மக்களவையில் முன்வைத்தார்.

இந்த பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட கலை மற்றும் தொல்பொருட்களின் எண்ணிக்கை 31. இதில், அதிகமாக தமிழகத்தின் பொருட்கள் 10, ஆந்திரா 3, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 2, குஜராத், உ.பி., மேற்கு வங்கம், பிஹார் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து தலா ஒன்றும் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டு மீட்கும் நடவடிக்கையில் மொத்தம் இடம்பெற்ற 40 பொருட்களில் தமிழகத்தில் அதிகமாக 27 உள்ளன. மீதியுள்ளவற்றில் மேற்கு வங்கம் 5, ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் பிஹார் தலா 2, திரிபுரா மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா ஒன்றும் உள்ளன.

இதையடுத்து திமுக எம்பியான கனிமொழி எழுப்பிய துணைக்கேள்வி குறித்து பேசும்போது, ‘கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் தொல்பொருட்களின் கணக்குகள் அரசிடம் உள்ளதா? கோயில்களின் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழகத்தின் கோயில்களில் இருந்த சிலைகளும், தொல்பொருட்களும் அதிகமாக காணாமல் போய் உள்ளன. இவற்றை பதிவு செய்து வைக்காதது அதன் முக்கியக் காரணமாக உள்ளது’’எனத் தெரிவித்தார்.

தனது கேள்வியில் கனிமொழி, கோயில்களில் உள்ள கற்சிலைகள் கூடக் காணாமல் போவது அதிர்ச்சியை அளிப்பதாகவும், இதனால் அவற்றை பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கனிமொழிக்கு அளித்த பதிலில் அமைச்சர் பிரகலாத் கூறும்போது, ‘‘இவை குறித்து கணக்கிட மாநில அரசுக்கும், அவற்றை நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கும் அதிகாரம் உண்டு. எனவே, அவற்றின் எண்ணிக்கையை மாநில அரசு பதிவு செய்ய முயல வேண்டும். பொருட்கள் தொடர்பான தரவுகள் அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள்தான் இந்த கணக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது அதை மத்திய அரசு பாராட்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x