Published : 26 Jun 2019 08:49 PM
Last Updated : 26 Jun 2019 08:49 PM
சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் செய்ய அவசரசட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என மத்திய அரசிடம் திமுக எம்பி டாக்டர்.செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். இதன் மீதான மசோதா விவாதத்தில் அவர் இன்று மக்களவையில் பேசினார்.
அப்போது தர்மபுரியின் எம்பியான செந்தில்குமார் பேசியதாவது: எந்த அவசரமும், எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத நிலையில், இந்த மசோதாவை அவசர சட்டம் மூலம் ஏன் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
’மத்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து, நிலம், பிறதேவைகள் மற்றும் வசதிகள் சலுகை விலையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள் என்ற வார்த்தையினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அறக்கட்டளைகள் என்பது லாபத்திற்காக இயங்காத அமைப்புக்கள் என்பதால், பெரிய அளவிலான அறக்கட்டளைகள் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை அமைப்புகளால் மூடப்பட்டுள்ளன.
இதனை சட்ட திருத்தத்தில் சேர்த்திருப்பது அதுவும் அவசர சட்டத்தில் சேர்த்திருப்பது, இந்த திருத்த மசோதாவின் குறிக்கோள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றது. அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர்களுக்கு சாதகமாக இருப்பதற்காக இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகின்றது.
பல வர்த்தகர்கள் சலுகை விலையில் நிலம் வாங்கலாம், அதில் ஈடுபடலாம் என்பதால் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆகவே, இந்த திட்டத்தின் நோக்கம் நீர்த்துப்போகக்கூடாது.
அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களும் வெற்றிகரமான தீர்வை எட்டவில்லை. திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் நினைத்த பலன்களை அளிக்கவில்லை.
அதற்கு பல வேலைகள் செய்யப்படவேண்டும். சப்ளை தொடர்பான அணுகுமுறை அல்லாமல் பற்றாக்குறை தொடர்பான அணுகுமுறையை வலியுறுத்த வேண்டும். சிறுகுறு மற்றும் நடுத்தர பொருளாதார மண்டலங்களை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார கூட்டுக்குழுவுடன் இணைப்பது பற்றி வலியுறுத்த வேண்டும்.
நல்லுறவு அவசியம்
பொருளாதார மண்டலங்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு மாநில அரசுகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும்.
மூடப்பட்ட தொழிற்சாலைகள்
இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டில் அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிறப்பான ஒற்றை சாளர முறைப்படுத்துதலுக்கு அரசிடம் இருந்து போதிய ஆதரவு இல்லை என்பது சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மிகப்பெரிய சவாலாகும்.
அரசின் கொள்கைகள்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெற்றிகரமாகவும், சுமூகமாகவும் செயல்படுவதற்கு நடைமுறை தாமதங்களை நீக்கி, கட்டமைப்பு சிக்கல்களை தீர்த்து, நிலையற்ற தன்மைகொண்டதாக உள்ள அரசின் கொள்கைகள் குறிப்பாக வரி தொடர்பான அம்சங்களை சரி செய்யப்பட வேண்டும்.
தொழிலாளர் சட்டம் அவசியம்
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் கடின நிலைமைகள் தொடர்பாக கவனத்தில் கொண்டு வரவும் விரும்புகின்றேன். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக்கூடிய தொழிலாளர் சட்டங்கள் இல்லை.
தொழிலாளர் உரிமை மறுப்பு
தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படும் நிலையில், அங்குள்ள தொழிலாளர்கள் வர்த்தக சங்கம் அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான பேரத்திற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
தர்மபுரிக்காக கோரிக்கை
என்னுடைய மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தருமபுரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்றும் வர்த்தகத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன். என்னுடைய மாவட்டமான தருமபுரியில் எந்த தொழிற்சாலைகளோ அல்லது நிறுவனங்களோ இல்லை.
வேலைவாய்ப்பு இல்லை
எனவே, என்னுடைய மாவட்டத்தின் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான ஆதாரம் எதுவும் இல்லாமல் உள்ளது. என்னுடைய தொகுதியான தருமபுரியில் தான் மாநில மற்றும் தேசிய சராசரியை ஒப்பிடுகையில், பள்ளிகளுக்கு பிறகு கல்லூரிகளில் இளங்கலையில் சேர்க்கை கோரும் மாணவர்களின் சராசரி அதிகம்.
காவிரி நீர்
கடும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மற்றும் காவிரி தீர்ப்பாணையத்தின் படி, காவிரி நீரை திறந்துவிடாததன் காரணமாக என்னுடைய தொகுதிமக்கள் வளர்ச்சிகளில் பங்கெடுக்க முடியாமல் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
தனது கன்னிப்பேச்சில் டாக்டர் செந்தில்குமார் திருவள்ளுவரின் ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில், ’பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தேற்றலால் செல்வம் நயனுடையான் கண்படின்’ என்ற பாடலை கடைசியாகக் குறிப்பிட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT