Last Updated : 16 Jun, 2019 12:00 AM

 

Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM

முத்தலாக் தடை மசோதாவுக்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மீண்டும் எதிர்ப்பு

வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, முத்தலாக் தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை மீண்டும் எதிர்க்க அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது.

முத்தலாக் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாக உரிய சட்டம் இயற்றி அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, மத்திய அரசு முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை சட்டமாக மாற்றுவதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதையடுத்து மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2-வது ஆட்சி அமைந்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதில், முத்தலாக் தடை மசோதாவை சில திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு பெற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், முத்தலாக் தடை சட்டத்தை மீண்டும் எதிர்க்க அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதன் நிர்வாகக்குழு அடுத்த வாரம் கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இதன் பிறகு முத்தலாக் தடை சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் புதிதாக ஒரு கோரிக்கையை முன்வைக்க உள்ளது. அதில், கணவரின் உரிமையை பறிக்கும் வகையிலும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மீறும் வகையிலும் இப்போதைய முத்தலாக் தடை அவசர சட்டம் உள்ளது என குறிப்பிட உள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக்குழு வட்டாரத்தினர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “முத்தலாக் நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்பவர்களை எப்படி சிறையில் தள்ள முடியும்? எனவே, இது தொடர்பாக மத்திய அரசு எங்களுடன் ஆலோசனை பெறுவது அவசியம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x