Published : 31 May 2019 11:42 AM
Last Updated : 31 May 2019 11:42 AM
பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் 56-வது நபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதாப் சந்திர சாரங்கிக்கு விருந்தினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியும் 24 கேபினட் அமைச்சர்களும் 9 இணையமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
56-வது பெயராக பிரதாப் சந்திர சாரங்கி அழைக்கப்பட்டார். பாஜக சார்பில் வெற்றி பெற்ற இவர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
64 வயதான சாரங்கி, அவரின் எளிமைக்காக அறியப்பட்டவர். சீவப்படாத தலை, எளிமையான உடையுடன் மேடையேறிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதாப் சந்திர சாரங்கி, ஒடிசா மாநிலம் பாலாசோர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சாரங்கி கூரை வேய்ந்த வீட்டிலிருந்து டெல்லிக்கு ஒரு சிறிய சாதாரண பையுடன் புறப்படும் படம் ட்விட்டரில் வைரலானது. அவரது எளிமையைப் பலரும் பாராட்டிப் புகழ்ந்தனர்.
இந்நிலையில், நேற்று அவர் பதவிப் பிரமாணம் செய்யவந்தபோது விருந்தினர்கள் உற்சாகமாக வரவேற்பு மீண்டும் சாரங்கி சமூகவலைதளங்களில் ட்ரெண்டானார்.
ஒடிசாவில் நன்கு அறியப்பட்டவர்:
நாட்டின் பிற பகுதி மக்களுக்கு தனது எளிமை மூலம் அறிமுகமான பிரதாப் சந்திர சாரங்கி ஒடிசா மக்களுக்கு நன்றாகவே பரிச்சியமானவர். அவர் அங்கு ஓர் அரசியல் செயற்பாட்டாளர். மதுவிலக்கு போராட்டங்கள், கல்வி சம்பந்தமான போராட்டங்களை முன்னெடுத்தவர்.
பழங்குடி கிராமங்களில் ஞான சிக்ஷ மந்திர் யோஜனா தலைமையின் கீழ் சமரகரா கேந்திரங்களை அவர் துவங்கினார். அவரது சொந்த தொகுதியான பாலாசோர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் இவை தொடங்கப்பட்டன.
தனது வயதான தாயை கவனித்துக் கொள்வதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவருகிறார். தேர்தலையொட்டி அவர் தொகுதி முழுவதும் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிரஞ்சன் பட்நாயக், பிஜூ ஜனதா தளம் சார்பில் ரபீந்திர ஜெனா ஆகியோ போட்டியிட்டனர். அவர்கள் இருவருமே பெரும் பணக்காரர்கள். இருந்தாலும் பிரதாப் சந்திர சாரங்கி அவரது எளிமையால் மக்கள் மனங்களை வென்று தேர்தலில் வாகை சூடியுள்ளார்.
சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார். ஆனால், இந்த முறை அவர் சுயேச்சையாக போட்டியிட்டார். பாஜக வழங்கிய கட்சி சீட்டை தொலைத்ததால் அவர் சுயேச்சையாகப் போட்டியிட நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT