Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கடந்த முறை முதல்வராக பதவி வகித்தபோது, அமராவதியில் உள்ள உண்டவல்லி என்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். அதற்கு அருகே அரசு செலவில் மக்கள் தர்பார் (பிரஜா வேதிகா) என்ற பெயரில் அரங்கம் கட்டினார். இங்கு மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் தர்பார் அரங்கை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் இந்த அரங்கம் கிருஷ்ணா ஆற்றுப்படுகையின் மீது விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை இடிக்க வேண்டும் எனவும் மங்களகிரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி அரசை வலியுறுத்தினார். இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் முதல்முறையாக மக்கள் தர்பார் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், முதல்வர் ஜெகன்மோகன் பேசும்போது, “அரசு இடங்களில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும். இப்பணி இந்த பிரஜா வேதிகாவில் தொடங்க வேண்டும். வரும் 26-ம் தேதி இந்த அரங்கத்தை இடியுங்கள். இந்த ஆலோசனைக் கூட்டம் தான் இங்கு நடக்கும் இறுதிக் கூட்டமாக இருக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT