Published : 01 Jun 2019 04:36 PM
Last Updated : 01 Jun 2019 04:36 PM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் எம்.வி.கவுதமா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கவுதமா, "அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே ஒரு தொகுதியில்கூட இத்தகைய குளறுபடி ஏற்படவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை மாற்றியமைக்க இயலாது என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்குமே தெரிந்த விஷயம்தான். அப்படியே ஏதாவது தவறு நடந்தாலும் அதனைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், வாக்குச்சீட்டு பயன்படுத்தினால் அப்படி ஏதும் கண்டறிய முடியாது.
ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்றால் அனைவருமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டை ஆதரிக்க வேண்டும் என நான் வேண்டுகிறேன். ஒருவேளை இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து நீதிமன்றத்தை அணுகலாம்.
அடுத்த 45 நாட்களுக்கு அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால், அதற்குள் அரசியல் கட்சிகள் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்.
இந்தத் தேர்தலுக்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கியிருக்கிறது" என்றார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக கூட்டணி 350 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களை மட்டுமே பிடித்தது.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் பயன்படுத்தபட்டது. இந்நிலையில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் விளக்கமளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT