Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM
ஒரு நிகழ்ச்சிக்கு யார் யாரெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யாரெல்லாம் அழைக்கப்படவில்லை என்பதைப் பொருத்துத்தான் அதன் முக்கியத்துவம் அமையும். பல நேரங்களில் அழைப்பு இல்லாதவர்கள் பெரிதாகப் பேசப்படுவார்கள். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு பீம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளின் அமைப்பில் உறுப்பினராக உள்ள பாகிஸ்தான் இந்த பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் முதன்முறையாக மோடி பிரதமர் ஆன போது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் சிறப்புவிருந்தினராக இருந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மோடி பிரதமர் பதவியேற்றபோது, இந்தியா - பாகிஸ்தான் உறவிலும் சார்க் நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாது தெற்கு ஆசிய பகுதியிலும் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக பாகிஸ்தான் தலைவரை அழைத்தார். ஆனால் மோடியின் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலும் உரி, பதன்கோட், புல்வாமா தாக்குதல்கள் போன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக உறவு மோசமான நிலையை அடைந்தது.
ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாலகோட்டில் இந்தியா நடத்திய வான்வெளி தாக்குதலில் குழப்பமடைந்து, அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என நடிக்க வேண்டியது இருந்தது. அமைதி வேண்டுமென்றால், தீவிரவாதம் இருக்கக் கூடாது என இந்தியா தரப்பில் தெளிவான ஒரு செய்தி சொல்லப்பட்டது. இதன் காரணமாகத்தான் இப்போது நடந்த மோடி பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கப்படவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சார்க் அமைப்பை கண்டுகொள்ளாமல் பீம்ஸ்டெக் நாடுகளை அரவணைத்து அரசியல் செய்வதாக சிலர் சொல்லலாம். ஆனால் அது மிகவும் குழப்பமான விவகாரம். பீம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பினர்களான வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமின்றி, கிர்கிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் மட்டுமல்லாது மத்திய ஆசிய நாடுகளுடனும் உறவை மேம்படுத்தும் நோக்கத்தை காணலாம். கிர்கிஸ்தான் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூட உறுப்பினர்களாக உள்ளன.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு இந்தியா 1996-ல் வழங்கியது. பாகிஸ்தான் அந்த அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிக்கவில்லை. அதன்பிறகு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவும் அந்த அந்தஸ்தை வாபஸ் பெற்றது. சார்க் அமைப்பில் உள்ள பீம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் கடைசியாக நடந்த சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டன. இதுபோன்ற காரணங்களால் சார்க் அமைப்பு செல்வாக்கில்லாமல் இருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த பீம்ஸ்டெக் அமைப்பின் நிலை அப்படியில்லை. உலகின் மொத்த மக்கள்தொகையில் 22 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 3 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலக வர்த்தகத்தில் 25 சதவீத பொருட்கள் வங்காள விரிகுடாவைக் கடந்துதான் செல்கின்றன. உலகின் மிகப் பெரிய வளைகுடாவும் இதுதான். கடந்த 2012 முதல் 2016 வரை இந்த அமைப்பில் உள்ள 7 நாடுகள் 3.4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது முக்கிய செய்தி - தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான் ராணுவத்தையும் உளவு அமைப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால்தான் அமைதிக்கான நடவடிக்கை தொடங்கும் என்பதுதான். அரசியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தால், அதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமாகும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கி விடும் அபாயம் ஏற்படும். அது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை பலவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
பாகிஸ்தான் போடும் அனைத்து பொருளாதார கணக்குகளும் தப்பாகி வருகிறது. தீவிரவாத தொடர்பு காரணமாக அரசியல் ரீதியாகவும் ஒதுக்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஆதரவு அளிக்கும் நாடுகளும் பாகிஸ்தானை கைவிட்ட கதையை ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் பார்த்தோம்.
கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த காத்மாண்டு சார்க் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சார்க் நாடுகள் மூலமோ அல்லது அதற்கு வெளியிலோ அல்லது சார்க் நாடுகளுக்குள்ளோ புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனப் பேசியிருந்தார். இதுதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருக்கப்போகும் மோடி சொல்லும் புதிய செய்தி.
-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT