Published : 22 Jun 2019 07:26 AM
Last Updated : 22 Jun 2019 07:26 AM
நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி அறியாத எம்பிக்களுக்கு சிக்கல் எழும் சூழல் நிலவுகிறது. இவ்விரு மொழிகளை போல் ஒரே சமயத்தில் பிராந்திய, மாநிலங்களின் உடனடி மொழிபெயர்ப்பு வசதி இல்லாதது அதன் காரணம் ஆகும்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அமைச்சர்களும், உறுப்பினர்களும் பெரும்பாலும் உரையாற்றும் மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக உள்ளது. இதனால், அவ்விரு மொழிகளை அறியாதவர்களுக்கு இருஅவைகளிலும் பேசப்படும் உரைகளை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் 1970-களில் தமிழக எம்பிக்களுக்கு தமிழில் உரையாற்ற நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. இந்தநிலை மாறி அனைத்து எம்பிகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற பெற்றுள்ள 22 மொழிகளில் பேசவும் அனுமதி உள்ளது. இவற்றின் ஏதாவது ஒரு மொழியில் எம்பிக்கள் பேசும் உரையின் மொழிபெயர்ப்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மற்ற உறுப்பினர்களுக்கு ஒலிபரப்பப்படுகிறது. இதன்மூலம், தம் தாய்மொழியில் பேசும் எம்பிக்களின் உரையை ஆங்கிலம், இந்தி மொழி அறிந்தவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இதே போல், ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசும் எம்பிக்களின் உரையை அவ்விரண்டையும் அறியாதவர்களுக்கு தம் தாய்மொழியில் புரிந்துகொள்ள வசதி இல்லை.
இதனால், இருமொழி அறியாத உறுப்பினர்கள் தம் கருத்துக்களை சபாநாயகர் அனுமதி பெற்று உடனடியாக எழுப்பும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கேள்வி நேரங் களில் அதை எழுப்பும் தமிழக எம்பிக்கள் அமைச்சர் கூறும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி களை அறியவில்லை எனில் துணை கேள்விகள் கேட்க முடியாது. இந்தவகையில், ஆங்கிலம், இந்தியில் பேசிய உறுப்பினர்களின் உரையில் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் அதை உடனடியாக அவையில் எழுப்புவதும் சிரமமாகி விடுகிறது.
மேலும், நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு அளிக்கப்படும் குடியரசுதலைவர் உரை, பட்ஜெட் உரை, மசோதாக்கள் உள்ளிட்டப் பலவும் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே அளிக்கப்படும். இதை படித்து உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத எம்பிக்களுக் கும் பல சிரமங்கள் ஏற்படுகிறது, இருஅவைகளின் எம்பிக்களுக் கான நாடாளுமன்ற நிலைக்குழுக் களில் பேசப்படும் உரைகளும் இந்தி, ஆங்கிலத்தில் அதிகம். கடந்த ஆட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களாக இருந்த தமிழக எம்பிக்களில் பலர் இந்த அம்மொழி களை புரிந்துகொள்ள முடியாமல் பொம்மைகளாக அமர்ந்து வந்த நிலையும் இருந்தது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் நாடாளுமன்ற அலுவலர் வட்டாரம் கூறும்போது, ‘இதனால், பலவகைகளில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் தமிழக எம்பிக்களாகவே உள்ளனர். இவர்கள் இருமொழிகள் மட்டுமே அறிந்த மத்திய அமைச்சர்களையும், அவரது அதிகாரிகளையும் சந்தித்து தம் தொகுதிப் பிரச்சனைகளையும் கூடப் பேச முடியாது. இதற்காக அவர்கள் தம் உதவியாளர்களை நம்பி இருக்க வேண்டியதாகி விடுகிறது. இது தமிழகத்திற்கு ஏற்படும் மாபெரும் இழப்பாகும்.’ எனத் தெரிவித்தன.
தென்பகுதி தவிர மற்ற மாநிலத்து எம்பிக்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்துள்ளது. தென்மாநிலங்களில் ஒடிஸா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா வில் இந்தியும் புழக்கத்தில் உள்ளதால் அதன் எம்பிக்களுக்கு பெரிய இழப்பில்லை. படிப்பறிவுள்ள கேரளாவில் இந்தி இல்லை என்றாலும் அம்மொழி அல்லது ஆங்கிலத்தை அதன் எம்பிக்கள் அறிந்து வைத்துள்ளனர். எனவே, இந்தி இல்லாத மாநிலமான தமிழகத்தின் எம்பிக்கள் ஆங்கிலமும் அறியவில்லை எனில் நாடாளுமன்றத்தில் செயல்படுவது சிரமமாகி விடுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆங்கிலம், இந்தி அறியாத தமிழக எம்பிக்கள் கேபினேட் அமைச்சர்களாகவும் இருந்தனர். அவர்களில் சிலருக்கு இருஅவைகளின் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மொழி அறியாமலும், அவைஅச்சம் காரணமாகவும் பதிலளிக்க முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இதனால், தமிழக அமைச்சர்களின் கேள்விகளுக்கு அவர்களது இணை அமைச்சர்களே பதில் அளித்து வந்ததும் அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கான வசதி செய்யும்படியும் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களால் அப்போதைய சபாநாயகர் மீராகுமாரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு மிகுந்த செலவில் கட்டிட அமைப்பை மாற்றி, சுமார் 200 உடனடி மொழிபெயர்ப்பாளர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதால் அந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது.
தற்போது நாடாளுமன்ற பிராந்திய உடனடி மொழி பெயர்ப்பாளர்கள் மக்களவையில் 21, மாநிலங்களவையில் 12 பேர் உள்ளனர். இதில் தமிழ் உடனடி மொழிபெயர்ப்பாளர்கள் இருஅவைகளிலும் தலா ஒருவர் மட்டுமே உள்ளனர். டெல்லியில் மத்திய அரசின் விஞ்ஞான்பவன் அரங்கில் மட்டும் தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகள் ஒரே சமயத்தில் பேசும், புரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அங்கு அடிக்கடி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடைபெறுவது காரணம். இந்தியாவை போல் அதிக மொழிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளது. இதன் நாடாளுமன்றத்தில் ஒரே சமயத்தில் சுமார் 200 மொழிகளில் பேசும், புரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தாய்மொழியில் பதிவாவதில்லை
ஆங்கிலம், இந்தியில் அவை களில் எம்பிக்களின் உரை அதேமொழிகளில் நாடாளுமன்ற பதிவில் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவுகள் பின்னர் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப் பட்டு விடுகிறது. ஆனால், தம் தாய்மொழிகளில் பேசும் எம்பிக் களின் உரை அதே மொழியில் பதிவாவதில்லை.
இவை, ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இத்துடன் அந்த எம்பி எந்த மொழியில் பேசினார் என்பதும் கூடக் குறிப்பிடப்படுவதில்லை. இதுபோன்ற நிலையால் இந்தி, ஆங்கிலம் அறியாத எம்பிக்களின் சிக்கல் இன்னும் முழுமையாக நீங்காத நிலை நாடாளுமன்றத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT