Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM
ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆந்திராவில் 2024-ம் ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
இதன்படி மதுவிலக்கு கொள்கையை மாநில அரசு தயாரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ஆலோசனை நடத்தினார். ஆந்திர அரசு குறைந்த வருமானத்தில் உள்ள நிலையில், வருவாயை பெருக்கும் வழிகளை முதல்வர் கேட்டறிந்தார். அப்போது, தேர்தல் வாக்குறுதியான பூரண மது விலக்கை அமல்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசித்தார். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த திட்டம் வகுக்குமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இதன்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை முதலில் அகற்றுவது, பிறகு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது, பின்னர் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுவை அனுமதிப்பது என படிப்படியாக பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் மற்றும் நிதி, கலால், வருவாய் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர்கள் பதவியேற்புகடந்த வியாழக்கிழமை முதல்வராக ஜெகன்மோகன் மட்டுமே பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் வரும் 8-ம் தேதி காலை அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
புதிய டிஜிபி
ஆந்திர மாநில புதிய டிஜிபியாக கவுதம் சவாங் நேற்று பதவியேற்றார். பின்னர் அவர் கூறும்போது, “சைபர் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே ஆந்திர போலீஸார் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் வகிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். மக்களுடன் காவல் துறையினர் நட்புறவுடன் செயல்படுவார்கள்” என்றார்.
இஃப்தார் விருந்து
ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் நரசிம்மன் நேற்று இஃப்தார் விருந்து அளித்தார். இதில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் இரு மாநில முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இரு மாநில முதல்வர்களுடன் ஆளுநர் நரசிம்மன் கலந்தாலோசித்தார். அப்போது இரு மாநில பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT