Last Updated : 21 Jun, 2019 12:00 AM

 

Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM

உ.பி.யில் ஐஏஎஸ் தமிழர் நடவடிக்கைக்கு யோகி ஆதரவு: 18 பாஜக கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

சென்னையை சேர்ந்த தமிழரான என்.சாமுவேல் பால், உ.பி. மாநிலத்தில் 2013 பேட்ச் அதிகாரி யாக உள்ளார். பரேலி மாநகராட்சி யின் முதன்மை ஆணையராக பணியாற்றும் சாமுவேலை அவரது அலுவலகத்தில் நுழைய விடாமல் கடும் போராட்டம் நடந்து வந்தது. இதற்கு அவர் பாஜக கவுன்சிலர் ஆதரவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சுமார் 120 கடைகளை அகற்ற முயன்றது காரணமாக இருந்தது.

இதை எதிர்க்க, அந்நகர பாஜக மேயரான உமேஷ் கவுதம் தலைமையில் பாஜக கவுன்சிலர் கள் கடந்த ஜூன் 1 முதல் 15 நாள் தர்ணா செய்தனர். அத்துடன் அதிகாரி சாமுவேலின் கொடும்பாவியையும் எரித்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் மாநகராட்சி பகுதியில் 144 தடை உத்தரவும் அமலாகி இருந்தது. இதையும் மீறி போராடியவர்கள் தமக்கு ஆதரவாக உ.பி. மாநில பாஜக அரசு இருக்கும் என நம்பினர். ஆனால், முதல்வர் யோகி அரசு, போராட்டக்காரர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், 144 தடை உத்தரவை மீறியதற்காக ஆறு கவுன்சிலர் கள் உள்ளிட்ட 12 பாஜகவினர் மீது மாஜிஸ்திரேட் சார்பில் வழக்கு பதிவாகி உள்ளது. மாவட்ட காவல்துறை அதிகாரியால், அரசு அதிகாரியை பணிசெய்ய விடாமல் தடுத்ததற்காகவும், அதிகாரி சாமுவேலின் கொடும்பாவியை எரித்ததற்காகவும் 12 கவுன்சிலர்கள் மீது வழக்குகள் பதிவாயின.

மூன்றாவது வழக்காக முதன்மை ஆணையர் சாமுவேலும் பாஜக 18 கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளார். தற்போது உ.பி. முதல்வர் யோகி அரசு ஆதர வுடன் தமிழரான அதிகாரி சாமுவேல் தம் பணிகளை வழக்கம் போல் செய்து வருகிறார். பரேலியில் கடைகளை ஆக்கிர மித்த வழக்கின் விசாரணையும் தீவிரமாக முடுக்கி விடப்பட் டுள்ளது.

சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடங்கப்பட்ட கடைகள் மீது மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. மே 15-ல் வெளியான அதன் அறிக்கையில், பாஜக கவுன்சிலர் ராஜு செய்னி குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இவருடன் சேர்த்து இருவர் மீது சாமுவேல் வழக்குகளை பதிவு செய்திருந்தார். இத்துடன், மேயரான உமேஷ் கவுதம் மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவருக்கு சொந்தமான இன்வர்டிஸ் பல்கலைக்கழகம் மீது 5,900 சதுர மீட்டர் அளவிலான நிலஆக்கிரமிப்பு வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் முதன்மை ஆணையரான சாமுவேலை ஆஜராகி வாதிட முடியாமலும் செய்யவும் முயற்சிக்கப்பட்டது. இதற்காக, மேயரின் மறைமுக ஆதரவுடன் சாமுவேலுக்கு எதிரான இந்த போராட்டம் நடந்தது.

இதன்மூலம் சாமுவேல் பணி மாற்றம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக யோகி அரசின் பரேலி மாவட்ட நிர்வாகம் தம் கட்சியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்திருப்பது உ.பி.யில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x