Published : 19 Jun 2019 12:00 AM
Last Updated : 19 Jun 2019 12:00 AM
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவரது மனைவி லாவண்யா (41), பிரகாசம் மாவட்டம், கொத்தகோட்டாவை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 2003-ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு பிரபாஸ் (14), சுங்கரா (11) என்கிற 2 மகன்கள் இருந்தனர். தம்பதியர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இதில் லாவண்யா பொறியியல் படிப்பு முடித்து, பி.எச்டி.யும் முடித்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் நாசாவில் பணியாற்றி, தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பொறியியல் படித்தவரான சந்திரசேகர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் சைமெண்ட்ஸ் பகுதியில் இவர்கள் சொந்தமாக வீடு வாங்கினர். இதில் மராமத்து பணிகள் செய்து முடித்து, கடந்த சனிக்கிழமை வீட்டின் கிரகபிரவேசம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு லாவண்யாவின் பெற்றோர்களான சீதாராமி ரெட்டி, ஹைமாவதி ஆகியோரும் சென்றிருந்தனர். இந்நிலையில் அன்றைய தினம் இரவு, அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, லாவண்யாவின் படுக்கை அறையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு, அவரது தந்தை சீதாராமி ரெட்டி எழுந்து வந்து பார்த்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த சந்திரசேகர், “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, நீங்கள் போய் தூங்குங்கள்” என்று கூறி மாமனாரை அனுப்பி வைத்து விட்டார். பிறகு தனது மகன்களின் அறைக்குச் சென்ற சந்திரசேகர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 மகன்களையும் துப்பாக்கியால் சுட்டார். பிறகு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் மீண்டும் கேட்டவுடன சீதாராமி ரெட்டியும், அவரது மனைவியும் ஓடிச்சென்று அறைகளில் பார்த்தபோது அனைவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதலில் அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கருதினர். ஆனால், சந்திரசேகர், தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டது ஊர்ஜிதம் ஆனது. பணிச்சுமை காரணமாகவும், தனது மூத்த மகனுக்கு தீராத நோய் இருப்பதாலும் சந்திரசேகர் சில நாட்களாக கவலையில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். சந்திரசேகருக்கு பெற்றோர் இல்லாத காரணத்தால், அனைவரின் உடல்களும் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT