Last Updated : 25 Jun, 2019 12:09 PM

 

Published : 25 Jun 2019 12:09 PM
Last Updated : 25 Jun 2019 12:09 PM

5 ஆண்டுகளாக நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது: மத்திய அரசு மீது மம்தா கடும் தாக்கு

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது என்று மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிந்துரையை ஏற்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். 21 மாதங்கள் அவசர நிலை நடைமுறையில் இருந்தது.

நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்ட 44-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ட்விட்டரில் அவசர நிலையை துணிச்சலாக எதிர்த்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

பாஜக தலைவர்கள் பலரும் அவசர நிலைக்கு எதிராக சமூக ஊடங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, அவசர நிலையின் 44-வது ஆண்டில், பிரதமர் மோடியின் அரசை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

அவர் பதிவிட்ட ட்வீட்டில், " 1975-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்ட நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆனால்,  கடந்த 5 ஆண்டுகளாக, நாட்டில் 'சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது. வரலாற்றில் இருந்து நாம் பாடங்களைக் கண்டிப்பாக கற்க வேண்டும். அதேசமயம், நாட்டின் ஜனநாயக அமைப்பு நிறுவனங்களைப் பாதுகாக்கவும் போராட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மம்தா எதிர்பார்த்த நிலையில், கடந்த முறை பெற்ற இடங்களைக் காட்டிலும் குறைவாக 22 இடங்களைத்தான் பெற்றார்.

தேர்தல் முடிந்து 2-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின், நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திலும் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். அதன்பின் ஒரே தேசம், ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி இருந்தது. அதிலும் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x