Published : 26 Jun 2019 04:30 PM
Last Updated : 26 Jun 2019 04:30 PM
ஆதார் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழுவிற்கு அனுப்ப மக்களவை எம்பியான டி.ரவிகுமார் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான அவர் இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
பணப்பரிவர்த்தனை சார்ந்த அனைத்து அம்சங்களிலும் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்த வகை செய்யும் சட்ட முன்வடிவை திங்கள் அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை அறிமுக நிலையிலேயே சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர்.
அடுத்த கட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ரவிக்குமார் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து மனு அளித்தார். இதில் அவர், ஆதார் சட்ட முன்வடிவை அப்படியே அமலாக்காமல் அதை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கருக்கு அளித்த மனுவில் ரவிகுமார் தெரிவித்து இருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு எதிராக இந்த சட்டமுன்வடிவு அமைந்துள்ளது. சொத்து உட்பட அனைத்துத் தனிப்பட்ட தகவல்களையும் அரசுக்கு மட்டுமன்றி தனியாருக்கும் தாரைவார்த்துத் தரும் வகையில் இந்த விதிகள் அமைந்துள்ளன. இவற்றை சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து சிக்கியதையும் இங்கு நினைவு கூர்ந்து விட வேண்டும்.
மக்களின் ரகசியக்காப்புகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் சட்டமுன்வடிவில் திருத்தம் செய்ய வேண்டும். இதனை உரிய நிலைக் குழுவுக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர்தான் சட்ட முன்வடிவை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT