Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM
உ.பி.யின் 80 தொகுதிகளில் பாஜகவை வீழ்த்த மாயாவதியின் பகுஜன் சமாஜ், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவற்றுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தார் அகிலேஷ். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தக் கூட்டணியில் மாயாவதிக்கு 10 தொகுதிகளும், அகிலேஷுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
அதே சமயத்தில், பாஜகவுக்கு 64 தொகுதிகளும், அதன் கூட்டணியான அப்னா தளம் கட்சிக்கு 2 தொகுதிகளும் கிடைத்தன. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கிடைத்தது.
எஸ்.பி. கட்சியின் தோல்விக்கு பல்வேறு காரணிகள் இருந்தபோதிலும், அக்கட்சி நிறுவனர்களில் ஒருவரும், முலாயம்சிங் யாதவின் சகோதரருமான ஷிவ்பால் சிங் முக்கிய காரணமாக இருந்தார்.
அகிலேஷுடன் ஏற்பட்ட மோதலால் வெளியேறி பிரகதீஷல் சமாஜ்வாதி (லோகியா) என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கி இத்தேர்தலில் ஷிவ்பால் போட்டியிட்டார். இவர், உ.பி.யில் நிறுத்திய வேட்பாளர்களால், யாதவ் சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக பிரிந்தன.
இதனால், 2014-ஐ விட இந்த தேர்தலில் எஸ்.பி.க்கு மூன்று தொகுதிகள் குறைவாகவே கிடைத்தன. இதுதொடர்பாக அகிலேஷ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஷிவ்பால் சிங் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஷிவ்பாலிடம் பேசி அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது சிறந்ததாக இருக்கும் என முலாயம் சிங் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை ஏற்று அகிலேஷும் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் எஸ்.பி. கட்சியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்துவதில் ஷிவ்பால் சிங் வல்லவர். அவரை சேர்ப்பதால் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு அதிக பலன் கிடைக்கும் என அகிலேஷிடம் தெரிவித்துள்ளோம்" என அவர்கள் கூறினர்.
இந்த தேர்தலில், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் கன்னோஜ் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமது கட்சி வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும், 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் டிம்பிளுக்கு கிடைத்த தோல்வியின் பின்னணியில் ஷிவ்பால் இருந்ததாக கருதப்படுகிறது.
பெரோஸ்பூரில் தனது சகோதரி மகனான அக்ஷய் யாதவை ஷிவ்பால் எதிர்த்து போட்டியிட்டார். இங்கு 28,000 வாக்குகளில் பாஜகவிடம் தோல்வி கிடைத்தது.
இதேபோல், அகிலேஷின் மற்றொரு குடும்பத்தினரான தர்மேந்தர் யாதவும் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், உ.பி.யின் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய ஷிவ்பால் சிங் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT