Published : 25 Mar 2018 10:52 AM
Last Updated : 25 Mar 2018 10:52 AM
ஆந்திர மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடிதம் எழுதியிருப்பதாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலப் பிரிவினை மசோதாவில் கூறியுள்ளபடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸையும் மக்களவையில் அக்கட்சி அளித்துள்ளது.
இதனிடையே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமித் ஷா நேற்று கடிதம் ஒன்று எழுதினார். அதில், ஆந்திராவுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியுதவி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ள அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அரசியல் லாபத்துக்காகவே தெலுங்கு தேசம் விலகியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது:
அமித் ஷா எழுதியுள்ள கடிதத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் திரித்து கூறப்பட்டுள்ளன. மாநிலப் பிரிவினை மசோதாவில் இடம்பெற்றுள்ளவற்றையே நாங்கள் கேட்கிறோம். இதற்காக, ஆந்திர மக்களை இழிவுப்படுத்தும் விதமாகவா கடிதம் எழுதுவது? ஆந்திராவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது. ஆனால், பாஜகவோ நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளது என்றார் சந்திரபாபு நாயுடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT