Published : 25 Sep 2014 10:07 AM
Last Updated : 25 Sep 2014 10:07 AM

இளைஞரை கொன்ற புலியை என்ன செய்வது?

‘பழக்கப்பட்ட புலி என்று ஒன்று கிடையவே கிடையாது’ - உலகிலுள்ள புலி ஆய்வாளர் களிடம் புழங்கும் பிரபல வாசகம் இது. கடந்த 2000-ம் ஆண்டில் ஆப்பிரிக்க காடுகளில் புலிகளுக்கு வசிப்பிடம் ஏற்படுத்துவதற்காக புலிகளை கட்டிப்பிடித்து கொஞ்சி, மிக நெருக்க மாக பழகிய ஜான் வார்டியும் இதையேதான் சொன்னார்.

தாய்லாந்து அரசாங்கம் காடுகளில் இருந்து குட்டிப் புலிகளை கைப்பற்றி, அதனை மனிதனுடன் பழக்கி புலிகள் சுற்றுலா (Tiger tourism) திட்டத்தை நடத்தி வருகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 செலுத்தினால் அந்தப் புலிகளுடன் கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடலாம். ஆனாலும், புலிகள் எந்த நேரத்திலும் மனிதருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் இந்தத் திட்டத்துக்கும் உலகெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. டெல்லி உயிரியல் பூங்காவில் நடந்துள்ள சம்பவமும் மேற்கண்ட கூற்றை உறுதிப் படுத்துகிறது.

டெல்லி புலி விஜய் மிகவும் சாதுவானது; அதன் பாதுகாவலர் களுடன் சகஜமாக விளையாடும் தன்மை கொண்டது என்கிறது பூங்கா நிர்வாகம். ஆனாலும், ஒரு புலி தனது எல்லைக்குள் புகுந்த இன்னோர் உயிரினத்தை தாக்கவே முற்படும். ஏனெனில், புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. அவை சிறுநீரை பீய்ச்சியடித்து தங்களுக்கான அதிகார எல்லையை நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த எல்லைக்குள் இரை விலங்குகளைத் தவிர வேறு புலி வருவதைகூட அவை விரும்பாது.

இளைஞரை கொன்ற அந்தப் புலி, உயிரியல் பூங்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் உயிரியல் ரீதியான அதன் பழக்க வழக்கங்கள் என்பது அதன் மரபு வழியாக வந்தவை. அதனால், அந்தப் புலி அந்த இளைஞரை தாக்கிக் கொன்றிருக்கலாம். தவிர, ஒரு புலி மனிதனை தாக்கிக் கொல் வதற்கான காரணத்தை ஒருபோதும் அறுதியிட்டு சொல்லவே முடி யாது. ஏனெனில், விலங்குகள் இப்படித்தான் நடந்துகொள்ளூம் என்று பத்தாயிரம் கருத்துருக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை யாரும் எதிர்பாராத பத்தாயிரத்து ஒன்றையும் செய்யும் என்கின்றன விலங்கியல் ஆய்வுகள்.

ஒருவேளை அந்த இளைஞர் எழுந்து நின்று, கடுமையாக சத்தம் எழுப்பியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம். ஏனெனில், உட்கார்ந்த நிலையில் இருந்த அந்த இளைஞரை தன்னை விட உயரம் குறைந்த இரை விலங்காக அந்தப் புலி கருதியிருக்கலாம். இதனால், நின்ற நிலையில் அந்த இளைஞர் இருந்திருந்தால் புலி விலகியிருக்கக்கூடும். ஆனால், அதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இதற்கிடையே அந்தப் புலியை உயிரியல் பூங்காவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அப்புறப் படுத்தி அதனை வேறு எங்கு வைப்பது? இன்னொரு உயிரியல் பூங்காவிலா? அதற்கு அங்கேயே இருக்கலாமே. காட்டில் விடலாம் என்கின்றனர் சிலர். காட்டில் விட்டால், அது பெரும்பாலும் இறக்கவே வாய்ப்பு இருக்கிறது. சுமார் 14 ஆண்டுகள் உயிரியல் பூங்காவில் வசித்த அந்தப் புலிக்கு காட்டு வாழ்க்கை தெரியாது. வேட்டை யாடியும் பழக்கமில்லை. எனவே, அதனை அப்புறப்படுத்துவது என்பது புத்திசாலித்தனம் அல்ல.

இப்போது மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அந்தப் புலி இளைஞரின் உடல் பாகங்கள் எதையேனும் சாப்பிட்டிருக்கிறதா என்பதுதான். அது பிரேதப் பரி சோதனை முடிவுகளில் தெரிய வரும். ஒருவேளை அப்படி மனித உடல் பாகத்தை சாப்பிட்டிருந்தால் - உப்பு ரத்தத்தின் சுவைக்காக அது மீண்டும் மனிதனை தாக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்போது அதை மனிதர்களின் அலட்சியத்தின்போதுகூட அணுக முடியாத, கடுமையான பாதுகாப்பு சூழலில் வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x