Published : 19 Mar 2018 02:41 PM
Last Updated : 19 Mar 2018 02:41 PM
சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான மனநிலையை பாஜக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முதல்முறையாக ஆளும்கட்சிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இடம் பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் இதுவரை பாஜகவுக்கு எதிராக எந்தவிதமான கருத்துக்களையு்ம தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச, பீஹார் மாநில மக்களவை இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து முதல் முறையாக ராம் விலாஸ் பாஸ்வான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த மக்களவை இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போதே தோல்வி கண்டது மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய அதிருப்தியின் விளைவாகும்.
குறிப்பாக சிறுபான்மை மக்கள், தலித் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக தலைவர்கள் எடுத்ததன் காரணமாக இந்த தோல்வி கிடைத்துள்ளது. பாஜக தலைவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது இனிவரும் காலங்களில் அவசியமானதாகும்.
பிஹார் மாநிலத்தைக் காட்டிலும், உத்தரப்பிரதேசத்தில் அடைந்த தோல்விதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவில் மதச்சார்பற்ற தலைவர்களே இல்லையா என்ற கேள்வியை இந்த தோல்வி எழுப்பி இருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் நித்யானந்த் ராய், கிரிராஜ் சிங் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்களுக்கு எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், நீண்ட ஆண்டுகளாக ஆட்சி செய்ததற்கும் தலித்துகள், பிராமணர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் ஆதரவே காரணம். ஆனால், இவர்கள் யாவருக்கும் எந்தவிதமான நல்லப்பணிகளையும் செய்யாத நிலையிலும் அவர்கள் காங்கிரஸை ஆதரிக்கிறார்கள். இதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதலால், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினர்கள், தலித்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பாஜவினர் தெரிவிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்
இவ்வாறு ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
ராம் விலாஸ் பாஸ்வானின் பேச்சு ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த பிரபலமாகி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி விலகிவிட்ட நிலையில், இப்போது, அடுத்ததாக ராம் விலாஸ் பாஸ்வான் கலகக் குரல் எழுப்பியுள்ளார் என்று சமூகவலைதளத்தில் கருத்துக்கள் வைக்கப்படுகிறது.
அரசியல் காலநிலையை நன்றாக கணிப்பதில் வல்லவர் ராம் விலாஸ் பாஸ்வான். ஆவர் பாஜகவை எதிராக கருத்துக்களை கூறுகிறார் என்றால், பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டது என்றும் ட்விட்டரில் கருத்துக்களைக்கூறுகின்றனர்.
மேலும், மத்தியில் எந்த கட்சி வந்தாலும், அதில் ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவியை பெறும் ராம் விலாஸ் பாஸ்வான், அடுத்த முறை அமையப் போகும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதேஅச்சாரமிடுகிறார் என்றும் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT