Published : 07 Mar 2018 09:30 AM
Last Updated : 07 Mar 2018 09:30 AM
க
டந்த வார பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் டிவிக்களில் வந்த விவாதங்களையும் பாருங்கள். நீரவ் மோடி, அவர் மாமா மேகுல் சோக்ஸி பற்றியும் அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த மோசடி பற்றியும்தான் இருந்தன. அதைத் தொடர்ந்து வந்தது 'ரோட்டோமேக்' பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரியின் வங்கி மோசடி. இதனால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சுரண்டப்பட்டு விட்டதாக பரபரப்பு எழுந்தது.
காங்கிரஸ் கட்சியும் விமர்சகர்களும், பொதுமக்கள் பணத்துக்கு தன்னைக் காவலனாகக் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியைக் கேலி செய்தனர். டாவோஸ் மாநாட்டில் மோடியுடன் நீரவ் மோடி இருக்கும் புகைப்படம் வெளியானது; எனவே ஊழல் பற்றிப் பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதியே இல்லை என அனைவரும் கண்டித்தனர்.
இந்த மோசடிகளோடு, இப்படித்தான் விஜய் மல்லையாவும் லலித் மோடியும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர் என்றனர். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சமாளிக்க முடியாமல் திணறிப் போயினர். இந்த மோசடியெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த 2011-ல்தான் நடந்தது என்ற அவர்களின் வாதம், சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையால் அடிபட்டுப் போனது. பிறகு இதெல்லாம் மாறிப்போனது. புதிய தலைப்புச் செய்திகள் உருவாயின.
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் என்ற தலைப்புச் செய்தியை நான் கூறவில்லை. இந்திராணி, பீட்டர் முகர்ஜியிடம் கார்த்தி சிதம்பரம் 7 லட்சம் டாலர் லஞ்சம் வாங்கினாரா? அதற்கு அவர் தந்தை ப. சிதம்பரம் உதவினாரா? சிபிஐ காவலில் கார்த்தி சிதம்பரத்துக்கு வீட்டு உணவு மறுப்பு. நகைகளை அணிந்து கொள்ள நீதிபதி அனுமதி.. இப்படி பல செய்திகள்.
கார்த்தி, கடந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டிருக்கலாம். வெளிநாட்டுக்குப் போகும்போது கைது செய்யப்படவில்லை. ஆனால் நாடு திரும்பியபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார்.
இது ஒரு அதிரடித் தாக்குதல்.மற்றதையும் பார்ப்போம். கடந்த 4 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த லோக்பால் நியமனம் குறித்த அறிவிப்பு வருகிறது. காங்கிரஸ் இதை எதிர்க்கிறது. புதிய தலைப்புச் செய்திகள் உருவாகின்றன. இதில் கடைசி, அமலாக்கத் துறை நோட்டீசுக்கு 6 வாரங்களில் பதில் அளிக்காத யாரும், 'தலைமறைவுக் குற்றவாளி' என அறிவிக்கப்படுவார்கள் என அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
ஒரு வாரம் முன்பு பாஜக தத்தளித்த நிலையுடன், தற்போதைய அரசியல் நிலைமையை ஒப்பிட்டுப் பாருங்கள். அத்தனை டிவி சேனல்களிலும் பாஜக போட்டுத் தாக்குகிறது. காங்கிரஸ் ப.சிதம்பரத்தையும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்ற இடங்களில் லோக்பால் மசோதா பற்றியும் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்தும் விவாதம் நடக்கிறது. பொதுத்துறை வங்கிகளைக் கண்காணிக்கும் சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டுகளைக் கண்காணிக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடிக்கு அதிகமாகக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் பற்றி சிபிஐ-.யிடம் தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில், கொள்ளையைத் தடுக்கத் தவறிய அரசு, அரசு வங்கிகளை கொள்ளையடித்த திருடர்களுடன் நட்பாய் இருந்த அரசு என்ற பெயர் அப்படியே மாறிவிட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் பலமுறை இதே யுக்தி கையாளப்பட்டிருப்பது தெரிய வரும். காஷ்மீர் மாநிலம் உரியில் தீவிரவாதத் தாக்குதலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, அடுத்து வந்த எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதலால் சரியாக்கப்பட்டது. . பண மதிப்பு நீக்கம் தாங்க முடியாத அளவுக்கு போனபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுக் கட்டாக பல ஆயிரம் கோடிகள் கைப்பற்றப்பட்டதாக படத்துடன் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இந்தப் படங்களும் செய்திகளும் போலி என அடுத்துவந்த நாட்களில் அம்பலமானது.
ரோஹித் வெமுலா தற்கொலை காட்சி, ஜேஎன்யூவில் பேசிய கண்ணையா குமார்மீது தேசத் துரோக வழக்கு போட்டதன் மூலம் மாற்றப்பட்டது. டோக்லாம் பிரச்சினைக்கு மிக எளிய வகையில் தீர்வு காணப்பட்டது. டிவி சேனல்களையும் பத்திரிகைகளையும் தேச நலனை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் அடக்கி வாசிக்கும்படி அரசுத் தரப்பில் அன்பாக வலியுறுத்தப்பட்டது.
எல்லா அரசுகளுமே தலைப்புச் செய்தியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயற்சி செய்யும். ஆனால் மோடி - அமித் ஷாவின் பாஜக இதை ஒரு கலையாகவே மாற்றிவிட்டது. புதிதாக வந்த அனைத்து தலைப்புச் செய்திகளுமே மோடி பற்றிய மூன்று முக்கியமான விஷயத்தை வாக்காளர்களுக்கு உறுதி அளித்தன. ஒன்று மோடி ஊழலுக்கு எதிரான போராளி, அடுத்து அவர் இந்து தேசியவாதத்தை தாங்கிப் பிடிக்கும் பாதுகாவலர், கடைசியாக அதோடு மிக அகலமான தோள்களையும் மார்பையும் கொண்ட அவரை எந்த நெருக்கடியும் ஒன்றும் செய்ய முடியாது.
இதை மன்மோகன் சிங் அரசுடன் ஒப்பிடுவோம். யாரோ சிலர் காய்கறி வியாபாரியிடம் இருந்து 'தக்காளியைத் திருடி விட்டதாக' வதந்தி பரவினாலே காங்கிரஸ்காரர்கள் ஒளிந்து கொள்வார்கள். ஒவ்வொரு நெருக்கயின்போதும் மோடி அரசு எப்படித் திறமையாகச் செயல்படுகிறது என்று இப்போது அவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள், இதை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்!
சேகர் குப்தா,
‘தி பிரிண்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ். ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT