Published : 08 Mar 2018 09:19 AM
Last Updated : 08 Mar 2018 09:19 AM

மாநில பிரிவினை மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு 2 நாள் கெடு- ஆந்திர சட்டப்பேரவையில் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு, மாநில பிரிவினை சட்டத்தின்படி சிறப்பு நிதி ஒதுக்க 2 நாள் கெடு விதித்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

மத்தியில் ஆளும் பாஜ அரசுக்கும், தோழமை கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கும் இடையே தீவிர பனிப்போர் நிலவி வருகிறது. மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்தப்படி அனைத்து சலுகைகளையும் ஆந்திராவுக்கு வழங்க தயக்கம் காட்டுவது ஏன் என ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வியை முன் வைத்துள்ளார். மேலும் பிரிவினையின்போது பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் 2 நாள் கெடு விதித்துள்ளார். இல்லாவிட்டால் கூட்டணி முறிவு ஏற்படுமென ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று இரண்டரை மணி நேரம் இதுகுறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநில பிரிவினையின்போது அறிவிக்கப்பட்ட 19 அம்ச திட்டங்களை நிறைவேற்ற ஏன் மத்திய அரசு தயங்குகிறது? மாநிலத்தை பிரிக்கும்போது, எதிர்க்கட்சியில் இருந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு போன்றோர், மாநில பிரிவினையால் ஆந்திராவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஆதலால், 10 ஆண்டு வரை அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென பேசினர்.

அதன் பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது. தற்போது 4 ஆண்டுகள் ஆகியும், சிறப்பு அந்தஸ்தோ, அல்லது சிறப்பு நிதியோ ஒதுக்கப்பட வில்லை. தேசிய உடைமையாக்கப்பட உள்ள போலாவரம் அணைக்கட்டு கட்டி முடிக்க ரூ.58 ஆயிரம் கோடி தேவை. இன்னமும் இதற்கு மத்திய அரசு ரூ.42 ஆயிரம் கோடி வழங்க வேண்டி உள்ளது. விசாகப்பட்டினத்தில் ரயில்வே தனி மண்டலம் அமைக்க வேண்டும். ஒரு தலைநகரை உருவாக்க குறைந்த பட்சம் ரூ. 42 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால் வெறும் ரூ.1,500 கோடி வழங்கி விட்டு, செலவு விவரங்கள் சரியில்லை என இப்போது கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டவே ரூ. 11,300 கோடி தேவை. ஆனால், வெறும் ரூ.421 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஐஐடிக்கு ரூ. 3,300 கோடி தேவை. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.100 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. தாங்கள் 2019ல் மத்தியில் ஆட்சி அமைத்தால், ஆந்திராவுக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. சிறப்பு நிதி அல்லது சிறப்பு அந்தஸ்து என ஏதாவது ஒன்று குறித்து இன்னமும் 2 நாட்களுக்குள் மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். இதன் காரணமாக விரைவில் தெலுங்கு தேசம்-பாஜ கூட்டனி முறியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் ஜேட்லி உறுதி

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “14-வது நிதிக்குழு பரிந்துரைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க சட்ட ரீதியாக வாய்ப்பு இல்லை. அதேநேரம் சிறப்பு அந்தஸ்து மூலம் கிடைக்கும் நிதிக்கு நிகராக ஆந்திராவுக்கு நிதியுதவி வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x