Published : 22 Mar 2018 08:03 AM
Last Updated : 22 Mar 2018 08:03 AM
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து தலையில் பாறாங்கல் போட்டு தாக்கி ஒரே மாதிரி கொலைகளைச் செய்தவரை ஆந்திர மாநில போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். தமிழகம், ஆந்திராவில் இதுவரை 8 பேரை கொலை செய்தது மட்டுமன்றி, கொலை, கொள்ளை என 28-க்கும் அதிகமான வழக்குகளும் கொலையாளி மீது இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரியில், கடந்த பிப்ரவரி 25-ம் தேதி, ரத்னம்மாள் (62) என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் யாரோ மர்ம நபர் பாறாங்கல் போட்டு கொலை செய்து தப்பி விட்டார்.
அவரிடமிருந்து செல்போனை திருடிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதேபோன்று, இந்த மாதம் 9-ம் தேதி பாலசமுத்திரம் மண்டலம், அல்லி ராஜு கண்டிகை என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த வள்ளியம்மாள் (70) என்பவரையும், மர்ம நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்து, அவரது வீட்டிலிருந்த வெள்ளித் தட்டை திருடிச் சென்றுள்ளார்.
இந்த 2 கொலைகளும் ஒரே மாதிரி நடந்துள்ளதால், சித்தூர் போலீஸ் எஸ்பி ராஜசேகர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், போலீஸார் அண்டை மாநிலமான தமிழகத்தில் இதுபோல் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு போன்ற இடங்களில் இதுபோன்ற கொலைகள் நடந்துள்ளதை அறிந்தனர்.
மேலும், சித்தூரில் நடந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரின் கைரேகையும், தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகளில் சிக்கிய கைரேகையும் ஒத்துப்போனது.
விசாரணையில் கொலையாளி வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்த முனுசாமி (42) என்பது தெரியவந்தது. 1992-ம் ஆண்டு முதல் இப்போது வரையில் முனுசாமி ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா உட்பட பல இடங்களில் 6 கொலைகள் செய்துள்ளதும், அவர் மீது 28 திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதையும் போலீஸார் விசாரணையில் கண்டறிந்தனர்.
2017-ம் ஆண்டு வெறும் 50 ரூபாய்க்காக 2 வயது சிறுமியை இவர் கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து முனுசாமியை கைது செய்ய ஆந்திர போலீஸார் பல இடங்களில் தேடினர்.
இவர், தனியாக இருக்கும் பெண்களையே கொலை செய்துள்ளார். மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலேயே அனைத்து குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
கொலை செய்த பெண்ணிடமிருந்து தாலி, சங்கிலிகளை இவர் பறிக்க மாட்டார். வீட்டின் பீரோ, அலமாரியில் பணம், செல்போன், நகை ஏதாவது இருந்தால் மட்டும் திருடிக்கொண்டு செல்வாராம்.
இந்நிலையில், முனுசாமியை 3 நாட்களுக்கு முன்பு சித்தூர் மாவட்டம், திகுவ கொத்தபல்லி பஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். நேற்று முன்தினம் முனுசாமியை போலீஸார் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், சித்தூர் சிறையில் முனுசாமி அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT