Last Updated : 07 Mar, 2018 12:23 PM

 

Published : 07 Mar 2018 12:23 PM
Last Updated : 07 Mar 2018 12:23 PM

லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு

 

திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும், வேலூரில் பெரியார் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர்.

திரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்ற பின் கம்யூனிஸ்ட் கட்சியனர் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது.

பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்குள் பாஜகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்களில் தாக்குதல் நடத்தினர். மேலும், பெலேனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த ரஷிய புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்து அகற்றினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள காலிகட் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜகவின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் இன்று காலை உடைத்து, முகத்தில் கறுப்பு மை பூசிவிட்டுச் சென்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் பூங்காவின் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியிலும், தண்ணீர் பாய்ச்சும் பணியிலும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஜாதவ்பூர் பல்கலையில் படிக்கும் 5 மாணவர்கள், 2 மாணவிகள் இந்த பூங்காவுக்குள் நுழைந்தனர்.

தாங்கள் கையில் வைத்திருந்த சுத்தியல் மூலம் ஷியாமா பிரசாத் முகர்ஜி சிலையை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சிலையின் முகத்தில் கறுப்பு மை கொண்டு பூசிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து உடனடியாக பூங்காவின் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, பூங்காவின் கதவுகளை மூடினர். அங்கு வந்த போலீஸார் இந்த 7 மாணவர்களையும் பேருந்து நிலையத்தில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதன்பின் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி அதற்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு பாஜக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சயன்தன் பாசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக நிறுவனர் பிஎஸ் முகர்ஜியின் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x