Published : 17 Mar 2018 12:25 PM
Last Updated : 17 Mar 2018 12:25 PM

திருப்பதி-திருமலையில் இன்று முதல் நவீன பேட்டரி பஸ்; பக்தர்கள் மகிழ்ச்சி

காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்த திருப்பதி-திருமலை இடையே அதிநவீன பேட்டரி பஸ் போக்குவரத்து இன்று காலை முதல் தொடங்கியது. சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள இந்த பஸ்ஸில் பயணம் செய்த பக்தர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆந்திராவில் வாகனங்கள் மூலம் காற்றில் மாசு ஏற்படுவதை குறைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முதற்கட்டமாக 1,500 பேட்டரி பஸ்களை இயக்க முடிவு செய்தார். இந்த பஸ்கள் திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் உதவியையும் நாயுடு நாடினார். அதன்படி, மத்திய மின் வாரிய அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஒரு எலக்ட்ரிக் பஸ்ஸின் விலை ரூ. 3 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக மத்திய அரசு ஒரு பஸ்ஸுக்கு ரூ. 87 ஆயிரம் மானியம் அளிக்கவும் முன் வந்தது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக கோல்ட் ஸ்டோன் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தற்போது முதலில் 2 பஸ்களை ஆந்திர அரசு வாங்கியது.

இந்த பஸ்கள் முதலில் திருப்பதி-திருமலை இடையேயும், விஜயவாடா விமான நிலையத்திலிருந்து வெலகபுடியில் உள்ள தலைமைச் செயலகம் வரையிலும் இயக்க முடிவு செய்தது.

இந்த பேட்டரி பஸ் வியாழக்கிழமை திருப்பதி வந்தடைந்தது. இந்த பஸ்ஸை இயக்க 5 ஓட்டுனர்களுக்கு கோல்ட் ஸ்டோன் நிறுவனத்தினர் பயிற்சி அளித்தனர். புகை வராத, காற்றில் மாசு கலக்காத இந்த பஸ்ஸில் 32 பேர் பயணிக்கலாம். 9 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ்ஸில், கண்காணிப்பு கேமரா, சீட் பெல்ட், டிவி, சொகுசு இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இதில் சென்ஸார் அமைக்கப்பட்டிருப்பதால், விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே தெரியப்படுத்தும் நவீன உத்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண பஸ்களுக்கு உள்ளதை போன்று ‘கியர்’ கள் இல்லை. அதற்கு பதிலாக 3 பட்டன்கள் மட்டுமே உள்ளன. அவை மூலமாக பஸ்ஸை சுலபமாக இயக்கலாம். இந்த பஸ்ஸில் இன்று காலை திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து திருமலைக்கு பயணிகள் பயணித்தனர். சத்தமே இல்லாமல், மாசு ஏற்படுத்தும் புகையும் இல்லாமல், மிகவும் சொகுசாக பயணிகள் பயணித்தனர்.

இந்த பஸ்ஸில் பயணம் செய்தது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பயணிகள் கருத்து தெரிவித்தனர். இந்த பஸ் குறித்து பக்தர்களிடம் கருத்துகள் கேட்டறியப்படுகிறது.

இந்த பஸ் பாதுகாப்பாக இருந்தால், இதேபோன்று மேலும் 40 பஸ்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x