Published : 01 Mar 2018 05:22 PM
Last Updated : 01 Mar 2018 05:22 PM
நாடுமுழுவதும் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்ந்த மக்கள், வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடியின் உருவ பொம்மையை எரித்து ஹோலி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக வங்கி சார்பில் சிபிஐயிடம் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நிரவ் மோடி, அவரின் மாமா மெகுல் சோக்சி ஆகியோரின் 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி உள்ளனர்.
ஆனால், இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வங்கி மோசடி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மும்பை வோர்லி பகுதியில் உள்ள பிடிடி சாவல் பகுதியில் உள்ள மக்கள் நிரவ் மோடியின் 58 அடி உயர உருவ பொம்மையை எரித்து ஹோலி பண்டிகை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
ஹோலி பண்டிகையின் போது, தீவினைகளை அழிக்கும் வகையில், பொருட்களைக் தீயிட்டு கொளுத்தி அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்பார்கள். இந்த ஆண்டு சாதாரண பொருட்களை தீயிட்டு கொளுத்துவதற்கு பதிலாக, நிரவ் மோடியின் உருவ பொம்மையை கொளுத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து பிடிடி சாவல் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், ‘ கடந்த 8ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சமூகத்தில் நிலவும் கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் பொம்மைகளைச் செய்து எரித்து வருகிறோம். இந்த ஆண்டு வங்கிமோசடி செய்து நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய நிரவ்மோடியின் உருவ பொம்மையை எரிக்க உள்ளோம்.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, குறைந்த அளவு மரக்கட்டைகள், வைக்கோல், புல் ஆகியவைகொண்டு பொம்மை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஹோலி பண்டிக்கைக்கு மிக உயர்ந்த பொம்மை நாட்டில் இதுவாகத்தான் இருக்கும். இதை லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சித்து வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT