Published : 24 Mar 2018 08:35 AM
Last Updated : 24 Mar 2018 08:35 AM

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டத்தை ஏற்க மறுப்பு: சமரச முயற்சியை நிராகரித்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் கடும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி மூலமாக சந்திரபாபு நாயுடுவுக்கு மத்திய அரசு தூது அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உட்பட மாநிலப் பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்ட 19 அம்சங்களையும் நிறைவேற்றக் கோரி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து பாரா முகம் காட்டி வந்ததால் அதிருப்தியடைந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்கட்டமாக, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தனது கட்சியின் சுஜனா சவுத்ரி, அஷோக் கஜபதி ராஜு ஆகிய இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார்.

அதன் பின்னரும், மத்திய அரசு இறங்கி வராதததால் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது.

மேலும், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸையும் அக்கட்சி வழங்கியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இதுதொடர்பான நோட்டீஸ் மக்களவையில் ஏற்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரியிடம் இவ்விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, மாநிலப் பிரிவினை மசோதாவில் கூறியபடி, விசாகப்பட்டினம் தனி ரயில்வே அமைப்பு, கடப்பாவில் இரும்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்குவதாக சுஜனா சவுத்ரியிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தத் தகவலை, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சுஜனா சவுத்ரி நேற்று காலை கூறினார். அப்போது அவருக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, “மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின்னர், அவர்கள் எதுவாகினும் நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டும். இப்போது, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினால், நம் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிடுவார்கள். ஆதலால், இந்த யோசனையை, நான் நிராகரித்ததாக ராஜ்நாத் சிங்கிடம் கூறிவிடுங்கள்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x