Last Updated : 24 Mar, 2018 03:23 PM

 

Published : 24 Mar 2018 03:23 PM
Last Updated : 24 Mar 2018 03:23 PM

எங்களை விட்டுப் பிரிந்தது ஆந்திர மாநில வளர்ச்சிக்காக அல்ல; அரசியலுக்காக: சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் அமித் ஷா கடும் தாக்கு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரிந்தது ஆந்திர மாநில வளர்ச்சிக்காக அல்ல, அரசியல் நோக்கத்துக்காக என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடுமையாக தாக்கி கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித்தொகுப்பும் கொடுக்க மறுத்துவிட்டது. இதனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் நாடாளுமன்றத்திலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து கடந்த 2 வாரங்களாக போராடி வருகிறது.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 8 பக்கத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது எதிர்பாராதது, துரதிருஷ்டமானது. அதேசமயம், தன்னிச்சையாக நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்கள்.

ஆந்திர மாநில மக்கள் மீதும், மாநிலத்தின் மீது பாஜக அக்கறையின்றி இருப்பதாக நீங்கள் கூறுவதில் உண்மையில்லை, அடிப்படை ஆதாரமற்றது. உங்களின் குற்றச்சாட்டையும், முடிவையும் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உங்களின் இந்த முடிவுகள் அனைத்தும், முழுமையாக, அரசியல் நோக்கத்துக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை.

அனைவருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று பிரதமர் மோடி முழக்கமிட்டு வரும்போது, ஆந்திராவை தனியாக விட்டுவிடமாட்டோம். பாஜகவும், மத்திய அரசும் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளையும், திட்டங்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால், இதை அரசியல் காரணங்களுக்காக நீங்கள் புறம்தள்ளிவிட்டீர்கள்.

கடந்த மக்களவை, மாநிலங்களவையில், உங்களின் கட்சிக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதபோது, பாஜக முயற்சி எடுத்து, ஆந்திர மாநில மக்களின் நன்மைக்காக உரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்தது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி பலவிஷயங்களை சரியாகக் கையாளவில்லை. ஆனால், பாஜக எப்போதும், தெலுங்கு பேசும் மக்களின் நலனுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நாட்டிலியே ஆந்திர மாநிலம் மட்டுமே வருவாய் பற்றாக்குறை மானியத்தை கடந்த 5 ஆண்டுகளாகப் பெற்று இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்குக்கூட நாங்கள் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது, ஆந்திர மாநில மக்களின் வளர்ச்சியில் அக்கறையின்றி இருக்கிறோம் என்று கூறமுடியுமா?

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், நீதிக்காகவும் பாஜக உழைப்பதில் கேள்விக்கே இடமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆந்திர மாநிலத்துக்காக ஏராளமான நிதி உதவிகளைச் செய்து இருக்கிறோம். ஆந்திர மாநிலத்துக்கு உண்மையான நண்பனாகவே மத்தியஅரசு இருந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின், 5 மிகப்பெரிய கட்டுமானப் பணிகளை மத்தியஅரசு தொடங்கி இருக்கிறது.

ஆந்திர மாநில அரசு தங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை கடந்த 2014-15ம் ஆண்டு இருந்ததாகக் கூறுவது மிகப்பெரிய பொய்யாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் ஆகியவை அளிப்பதால், அரசுக்கு செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால், அதை சொந்த வருவாய் மூலமே ஈடுகட்ட வேண்டும். இந்தச் செலவுகளை மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்டி கொடுக்க முடியாது.

14-வது நிதிஆணையம், எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் முறைப்படி விவாதிக்காமல், சில கட்சிகள் இதை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது.''

இவ்வாறு அமித் ஷா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x