Published : 09 Mar 2018 08:47 AM
Last Updated : 09 Mar 2018 08:47 AM

தேசிய கட்சிகள் மீது நம்பிக்கையில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை

ஆந்திராவுக்கு தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை பார்க்கும்போது, தேசிய கட்சிகள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தை பிரித்ததைவிட, பிரித்த முறைதான் ஆந்திர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மாநில பிரிவினை மசோதாவை முழுமையாக நிறைவேற்றுவோம் என பாஜக உறுதியளித்ததினால்தான் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் இப்போதோ, நிபந்தனைகளை மீறுவதாக என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தேசிய கட்சியான பாஜக இதுபோன்று நடந்து கொள்வது சரியல்ல.

தேசிய கட்சிகள் இதுபோன்று நடந்து கொள்வதால் அவைகள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது. மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கூறியது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாங்கள் கேட்க கூடாததை கேட்கவில்லை. மாநில பிரிவினை மசோதாவில் கூறியுள்ளதை அமல்படுத்துமாறு கூறினோம். ஆந்திராவுக்கு காங்கிரஸ் இழைத்த அநீதி கொஞ்சம் நஞ்சமல்ல. இதற்கு ஈடுகட்டும் வகையில் மசோதாவை நிறைவேற்றவே நாங்கள் கேட்டுக்கொண்டோம். மாநில மக்களின் நலனுக்காக அனைவரும் ஒற்றுமையுடன் போராடும் தருணம் உருவாகி உள்ளது. கட்சி, ஜாதி, மத பேதமின்றி போராட அனைவரும் முன் வர வேண்டும்.

ஜெகன்மோகன் ரெட்டி

பிரகாசம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று சந்தராவூரு எனும் இடத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தொடக்கத்திலிருந்தே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக வரும் ஏப்ரல் 6- ம்தேதி வரை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை அளிக்காவிடில், அன்றைதினம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என ஏற்கனவே அறிவித்திருந்தேன். மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் தீர்மானித்திருந்தேன். இதனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இத்தனை ஆண்டுகள் இல்லாதவாறு, சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் மத்திய அரசு மீது நெருக்கடி கொடுத்தார்.

இதற்கு ஒப்புக்கொள்ள இயலாது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக கூறிய பின்னர், வேறு வழியின்றி தனது அமைச்சர்கள் இருவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார்.

தேர்தல் நெருங்குவதால், மக்களை சந்திக்க வேறு வழியின்றியே சந்திரபாபு நாயுடு தனது மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால், கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், தங்களுடைய அமைச்சர்களும் ராஜினாமா செய்த பின்னர், இன்னமும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது ஏன்? பாஜகவுடனான மத்திய கூட்டணியிலிருந்தும் தெலுங்கு தேசம் தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் ஆந்திர மாநில மக்களிடமிருந்து வர இருக்கும் எதிர்ப்பை சமாளிக்க வேறு வழியின்றியே முதல்வர் சந்திரபாபு நாயுடு தலை வணங்கியுள்ளார். இவ்வாறு ஜெகன் மோகன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x