Published : 14 Mar 2018 08:47 PM
Last Updated : 14 Mar 2018 08:47 PM
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்போது முக்கியச் செய்தியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவு நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு முக்கிய காரணம் யோகி ஆதித்தநாத். அவர் ஐந்து முறை எம்.பி.யாக இருந்த கோரக்பூர் தொகுதியில் தேர்தல் நடப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. ஆளும் பாஜகவிற்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் களமிறங்கின. மாயாவதி இதில் போட்டியிடப் போவதில்லை என விலகிக் கொண்டார். இதனால் இந்த தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது எளிது என கூறப்பட்டது.
ஆனால், மார்ச் 23-ல் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலையொட்டி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, இரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும், சமாஜ்வாதிக்கு, பகுஜன் சமாஜ் ஆதரவு கரம் நீட்டியது. இதனால், அங்கு பாஜகவின் எளிதான வெற்றி, பெரும் சவாலாக மாறியது. மேலும் பூல்பூரில் ஜாட் சமூக வாக்குகளை கொண்ட அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளமும், சமாஜ்வாதிக்கு ஆதரவு தந்தது.
எதிர்பார்த்தது போலவே உத்தரப் பிரதேச இடைத் தேர்தல் ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக சமாஜ்வாதி கட்சிக்கு சென்றதால் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. ஏறக்குறைய காங்கிரஸின் வாக்குகளில் ஒரு பகுதி கூட சமாஜ்வாதி பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டால் பாஜகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்த முடியும் என்பது உ.பி.யில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்று திரளும் செயல்திட்டம் வெற்றி பெறுவதற்கான தொடக்கம் இது என மம்தா பானர்ஜி குறிபிட்டுள்ளார். மாயாவதிக்கும், அகிலேஷுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தல்
பாஜக மற்றும் காங்கிரஸை ஏற்றுக் கொள்ளாத மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்ற கோஷத்தை தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் ஏற்கெனவே முன் வைத்துள்ளார்.
இதற்கு, இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி ஆகியோர் ஏற்கெனவே வரவேற்றுள்ளனர். இந்த அணியில் மாயாவதியையும், அகிலேஷையும் கொண்டு வர வேண்டும் என்ற மம்தாவின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், காங்கிரஸ் தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கும் முயற்சி மற்றொரு பக்கம் வேகமெடுத்துள்ளது. இடதுசாரி கட்சிகளின் ஒரு சில தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக சோனியா காந்தி அளித்த விருந்தில் மாநில கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதனால் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் வலிமையான கூட்டணி அமையுமா? அல்லது மாநிலக் கட்சிகள் அணி வகுக்கும் முன்றாவது அணியும் உதயமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பொறுத்தே 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT