Published : 16 Mar 2018 12:04 PM
Last Updated : 16 Mar 2018 12:04 PM
புனேவில் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு மாந்த்ரீகம் செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
மஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சந்தியா சோனாவானே (Sandhya Sonavane) (24), என்பவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர் சுனில் சாவன் என்பவர் சிகிச்சை அளித்தார்.
ஆனால், சந்தியாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகவே, அவரை சற்று பெரிய மருத்துவமனையான தீனாநாத் மங்கேஷ்கர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்குமாறு கூறியிருக்கிறார் மருத்துவர் சுனில் சாவன்.
இதையடுத்து, சந்தியாவின் உறவினர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அவரை தீனாநாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
ஆனால், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சந்தியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால், அவரது உடல்நிலை குறித்து உறவினர்கள் மருத்துவர் சாவனிடம் முறையிட்டனர்.
இந்நிலையில், சந்தியாவின் உடல்நிலை குணமாக மருத்துவர் சாவன் மந்திரவாதி ஒருவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கே அழைத்துவந்து மந்திரிப்பதற்காக சந்தியாவின் உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இருப்பினும், சந்தியா நோய் குணமடையாமல் மரணமடைந்தார். இதையடுத்து, மருத்துவர் சாவனையும், அவர் அழைத்துவந்த மந்திரவாதியையும் கைது செய்ய வேண்டும் என சந்தியாவின் சகோதரர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அந்த மந்திரவாதியை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் மந்திரவாதி மந்திரித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT