Published : 14 Mar 2018 09:13 AM
Last Updated : 14 Mar 2018 09:13 AM
தெலங்கானா சட்டப்பேரவையில் மேலவைத் தலைவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் இருவரின் பதவியை பறித்து சபாநாயகர் நேற்று உத்தரவிட்டார். மேலும் 11 எம்எல்ஏக்களை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்ட் செய்தார்.
தெலங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. சட்டப்பேரவை, சட்டமேலவையின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் நரசிம்மன் உரையாற்றினார். இந்நிலையில் ஆளுநர் உரையில் விவசாயிகள் மேம்பாடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எதுவும் இல்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கே.வெங்கட் ரெட்டி மைக்கில் இருந்த ஹெட்போனை எடுத்து வீசியதில் மேலவைத் தலைவர் சுவாமி கவுடுவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சுவாமி கவுடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை கூடியதும், முதல்நாள் அமளி தொடர்பாக, சட்டப்பேரவை விவகார அமைச்சர் ஹரீஷ் ராவ் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அமளிக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கே.வெங்கட் ரெட்டி, எஸ்.ஏ. சம்பத்குமார் ஆகியோரை பதவி நீக்கம் செய்யவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனா ரெட்டி, காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் கீதா ரெட்டி, உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட 11 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைக்கவும் தீர்மானத்தில் அவர் கோரினார்.
இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரை பதவி நீக்கம் செய்தும் 11 பேரை சஸ்பெண்ட் செய்தும் சபாநாயகர் மதுசூதனாச்சாரி உத்தரவிட்டார். உடனே காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டப்பேரவை முன்புள்ள காந்தி சிலை முன் காங்கிரஸார் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவி பறிப்புக்கு எதிராக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் இன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். மேலும் தெலங்கானா முழுவதும் ஆளும் கட்சிக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் முதல்வரின் உருவ பொம்மையை எரித்து, மக்களிடம் நியாயம் கேட்கப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜனா ரெட்டி அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT