Published : 17 Mar 2018 04:46 PM
Last Updated : 17 Mar 2018 04:46 PM
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி இந்த வாரத்தின் லைம் லைட்டானது.
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர், பிஹாரில் அராரியா தொகுதிகளில் பாஜக அடைந்த தோல்வி தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்துக்கான முன்னோட்டத் தேர்தலாகவே பலராலும் பார்க்கப்படுகின்றன. இந்த இடைத்தேர்தலில் பீஹாரில் அராரியா தொகுதியை ராஷ்ட்ரிய ஜனதாதளம் தக்க வைத்திருக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தொகுதிகளாக இருந்த கோரக்பூர், புல்பூர் ஆகிய தொகுதிகளை தக்கவைக்க முடியவில்லை. எதிர்க்கட்சியிடம் இழந்து நிற்கிறது பாஜக.
இதில் குறிப்பிடும்படியான விஷயம், இந்த ஆண்டில் மட்டும் ஆல்வார், ஆஜ்மீர் (ராஜஸ்தான்), கோரக்பூர், புல்பூர் (உத்தரப் பிரதேசம்) ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் அத்தொகுதிகளை பாஜக இழந்திருக்கிறது. கடந்த ஆண்டில் குருதாஷ்பூர் (பஞ்சாப்), 2015-ல் ஸ்ரீநகர் (காஷ்மீர்) ஆகிய தொகுதிகளை பாஜக ஏற்கெனவே இழந்திருக்கிறது. இதில் ஸ்ரீநகர் தொகுதி பாஜகவின் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வசம் இருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ரட்லம் (மத்தியப் பிரதேசம்) தொகுதியை காங்கிரஸிடம் இழந்தது பாஜக. 2014 முதல் அண்மையில் முடிந்த இடைத்தேர்தல் வரை 2018 வரை ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் இழந்திருக்கிறது பாஜக.
இந்த நான்கு ஆண்டுகளில் 3 இடைத்தேர்தல்களில் மட்டுமே பாஜக தொகுதியைத் தக்கவைத்திருக்கிறது. பீட் (மகாராஷ்டிரா), வதோதரா (குஜராத்), ஷாதோல் (மத்தியப் பிரதேசம்) என மூன்று தொகுதிகள் மட்டுமே இடைத்தேர்தல்களில் பாஜக தக்க வைத்துக்கொண்ட தொகுதிகளாகும். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 283 தொகுதிகளை பாஜக தனித்துப் பெற்றது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சியின் பலம் 273 (272 + சபாநாயகர்) ஆகக் குறைந்துவிட்டது. 6 தொகுதிகளை பாஜக இழந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
இவை தவிர பாஜக வெற்றிபெற்ற கைரானா (உ.பி.), பால்கர், பாந்த்ரா கொண்டியா (மகாராஷ்டிரா) ஆகிய தொகுதிகள் காலியாக இருப்பதால் இடைத்தேர்தலுக்கு இந்தத் தொகுதிகள் காத்திருக்கின்றன. பிஹாரில் உள்ள தர்பங்கா தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற கீர்த்தி ஆசாத், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், எக்கட்சியையும் சாராத உறுப்பினராக உள்ளார். இந்த வகையில் 10 உறுப்பினர்கள் எண்ணிக்கை பாஜகவுக்குக் குறைந்திருக்கிறது.
ஆனால், இவற்றில் 6 தொகுதிகளை பாஜக தக்கவைக்க முடியாமல் போனதுதான் குறிப்பிடும்படியான விஷயமாகி இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் நான்கு தொகுதிகளை பாஜக இழந்திருப்பதால், அந்தக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு வாய்ப்பாகி இருக்கிறது. பாஜக தன் தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் தாரைவார்த்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் அதிகத்திருக்கிறது. 2014-ல் 44 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ், இன்று தன் எண்ணிக்கையை 48 ஆக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக வென்ற ரட்லம், குருதாஷ்பூர், ஆல்வார், ஆஜ்மீர் ஆகிய நான்கு தொகுதிகளை இடைத்தேர்தல் மூலம் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.
இடைத்தேர்தல்களில் பாஜக தொகுதிகளை தொடர்ந்து இழந்துவரும் நிலையில் பிற கட்சிகள் தங்கள் தொகுதியை இடைத்தேர்தல் மூலம் தக்கவைக்கத் தவறவில்லை. திரிணமூல் காங்கிரஸ் (பங்கான், குச்பெஹர், உலுபெரியா தொகுதிகள்), தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (மேடக், வாரங்கல் தொகுதிகள்), பிஜூ ஜனதாதளம் (காந்தமால்), சமாஜ்வாடி (மெயின்பூரி), ராஷ்டிரிய ஜனதா தளம் (அராரியா) ஆகிய கட்சிகள் இடைத்தேர்தல்களில் தொகுதிகளை இழக்காமல் தக்கவைத்திருக்கின்றன. இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பாஜக மட்டும்தான். பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகள் இடைத்தேர்தலுக்குக் காத்திருக்கின்றன என்பதால், இடைத்தேர்தல் அறிவிப்புக்காக எதிர்க்கட்சிகள் ஆர்வமாக எதிர்நோக்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT