Published : 29 Mar 2018 08:05 AM
Last Updated : 29 Mar 2018 08:05 AM

மத்திய அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியப் போக்கைப் பின்பற்றுவதாகக் கூறி அதனை கண்டித்து நேற்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலக ஊழியர்கள் என அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவை மற்றும் தலைமை செயலகத்துக்கு வந்தனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியப் போக்கைக் காட்டி வருகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இதனால், வரும் 6-ம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவரவரின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவித்தார். அதனைப் பின்பற்றும் வகையில் நேற்று சந்திரபாபு நாயுடு உட்பட, ஆந்திர அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித் தனர்.

மேலும் வரும் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லிக்கு சென்று முக்கியமான கட்சி தலைவர்களைச் சந்தித்து, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டியதற்காக காரணத்தை விளக்கவும் உள்ளனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

இதனிடையே ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், வரும் 6-ம் தேதிக்குள் மக்களவையில் அளித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாவிட்டால், 6-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்வது என தீர்மானித்து அதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி வழங்கும் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x