Published : 25 Mar 2018 04:41 PM
Last Updated : 25 Mar 2018 04:41 PM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூக விரோதிகள் 6 பேரை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இதில் ஒரு ரவுடிக்கு பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு அவரை பிடிக்க ரூ.ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த ரவுடியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். மாநிலத்தில் சமூகவிரோதிகள், ரவுடிகள், மாபியாக்கள் அதிகாரம் நசுக்கப்படும், சட்டம்ஒழுங்கு காக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார்.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் போலீஸார் தொடங்கிய என்கவுண்ட்டர் பணி தொடர்ந்து நடந்து வருகிறது இதுவரை 45 சமூகவிரோதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் இந்த ஆண்டு மட்டும் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மட்டும் 184 ரவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 6 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து சஹாராபூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பப்லூ குமார் கூறியதாவது:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா, காஜியாபாத், ஷஹரான்பூர், முசாபர்நகர் ஆகியஇடங்களில் ரவுடிகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சனிக்கிழமை இரவு தேடுதல் வேட்டை நடத்தினோம்.
இதில் நொய்டாவில் பல்வேறு கொலை, கொள்ளைகளில் தொடர்புடைய சர்வான் சவுத்ரி என்ற ரவுடி நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்தார். அவருடன் நேற்று இரவு போலீஸார் நடத்திய துப்பாக்கி சண்டையில் அவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஒரு ஏகே47ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
மேலும், சஹரான்பூரில் சலீம் என்ற ரவுடியை பிடித்துக்கொடுத்தால், தகவல் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த ரவுடியும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இவரிடம் இருந்து ரூ. ஒரு லட்சம், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலும், காஜியாபாத் நகரில் நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த ராகுல் என்ற கொள்ளையனும், சோனு என்ற கொள்ளையனும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் போலீஸார் பிடிக்க முயன்ற போது நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் சோனு என்ற கொள்ளையன் தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. அவரும் கொல்லப்பட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT