Last Updated : 22 Mar, 2018 12:28 PM

 

Published : 22 Mar 2018 12:28 PM
Last Updated : 22 Mar 2018 12:28 PM

சி.ஏ விவகாரம்: 39 இந்தியர்கள் மரணத்துக்கு பதில்?, கவனத்தை திசைதிருப்பாதீர்கள்: பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ விவகாரத்தை மத்திய அரசு புதிதாக கண்டுபிடித்து குற்றம் சாட்டி இருப்பது ஊடகத்தின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல், வர்த்தக ஆய்வு நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களுடன் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்துக்கு உதவியதாக இங்கிலாந்தில் உள்ள சேனல்4 நிறுவனம் அம்பலப்படுத்தியது.

இந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸுடன் ராகுல் காந்தி இருமுறை சந்தித்துள்ளார். வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நிறுவனத்தின் உதவியுடன் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்று பாஜக குற்றம்சாட்டியது.

இந்திய தேர்தலில் பேஸ்புக் தலையிட்டால் அந்த நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்குக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஈராக்கில் மொசூல் நகரில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் 39 இந்தியர்கள் ஐஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளது தற்போது வெளியாகி உள்ளது. அந்த விஷயத்தில் இருந்து ஊடகங்களை திசை திருப்பும் நோக்கில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு கையில் எடுத்துள்ளது.

39 இந்தியர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?,ஏன் இத்தனை நாட்கள் அவர்கள் குறித்து அரசு மவுனமாக இருந்தது ஆகிய கேள்விகள் எழுகின்றன. ஆனால், இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கும் நோக்கில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சியை இணைத்து பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x