Published : 29 Sep 2014 10:00 AM
Last Updated : 29 Sep 2014 10:00 AM
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், 7,400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நாந்தெட் தெற்கு தொகுதியில் 91 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக குஹகர் (ரத்னகிரி), மஹிம் (மும்பை), குடால் (சிந்துதுர்க்) ஆகிய தொகுதிகளில் தலா 9 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் திங்கள் கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவ தற்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சுமார் 7,401 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அனைத்து 288 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் 286-ல் போட்டியிடுகிறது. 257 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ள பாஜக, மீதமுள்ள 31 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது. சிவசேனா 286 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே மகள் பங்கஜா போட்டியிடும் பர்லி, அருண் கவுளியின் மகள் கீதா போட்டியிடும் பைகுல்லா ஆகிய 2 தொகுதிகளிலும் சிவசேனா போட்டியிடவில்லை. சிவசேனா கட்சியின் தலைவரும், கட்சியின் முதல்வர் வேட்பாளராக கருதப்படுபவருமான உத்தவ் தாக்கரேவும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே போட்டியிடவில்லை.
தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையிலான 15 ஆண்டு கால கூட்டணி முறிந்தது. இதனால், முதல்வர் பிரித்விராஜ் சவாண் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் கராட் தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுபோல் சிவசேனா, பாஜக இடையிலான 25 ஆண்டு கால கூட்டணியும் முறிந்தது. மேலும் எம்என்எஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவதால் அங்கு 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT