Published : 22 Mar 2018 08:51 AM
Last Updated : 22 Mar 2018 08:51 AM

இது 5 கோடி மக்களின் நம்பிக்கையில்லா தீர்மானம்: மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசம்

“இது 5 கோடி ஆந்திர மக்களின் நம்பிக்கையில்லா தீர்மானம். இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்’’ என்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திருமலையில் இருந்து டெலிகான்பரன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள தனது கட்சி எம்பிக்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நாம் மக்களுக்காகவும், நீதிக்காகவும் போராடுகிறோம். இதே நிலை மத்திய அரசு பணிந்து வரும்வரை நீடிக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு தாமதிப்பதன் மூலம் அவர்கள் மீது ஆந்திர மக்களின் கோபம் இரட்டிப்பாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதலால், இந்த நியாயமான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது 5 கோடி மக்களின் நம்பிக்கையில்லா தீர்மானம்.

தேசிய அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை என எவ்வளவு முறை கூறினாலும் பாஜக நம்ப மறுக்கிறது.

சிறப்பு அந்தஸ்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டும். அதற்கு அனைவரும் தயாராக இருங்கள். மாநில பிரிவினையால் ஆந்திர மாநில வளர்ச்சி 20 ஆண்டு பின்னோக்கி சென்று விட்டது. மத்திய அமைச்சரவையில் இருந்து 2 தெலுங்கு தேச அமைச்சர்கள் விலகினாலும், ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அக்கறை காட்டாத மத்திய அரசுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

பேரனின் பிறந்த நாள்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனது பேரனின் பிறந்த நாள் என்பதால் நேற்று முன்தினமே அவர் தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, சம்பந்தியான நடிகர் பால கிருஷ்ணா, அவரது மனைவி வசுந்தரா ஆகியோருடன் திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கினார். பின்னர், நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பேரனின் பிறந்த நாளையொட்டி நேற்று திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு செலவை சந்திரபாபு நாயுடு ஏற்று, அதற்கான செலவான ரூ. 26 லட்சத்துக்கு காசோலையை வழங்கினார். மேலும், பக்தர்களுடன் அமர்ந்து இலவச உணவையும் அவர் சாப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x