Published : 28 Mar 2018 08:56 AM
Last Updated : 28 Mar 2018 08:56 AM

‘ஆபரேஷன் திராவிடம்’ திட்டத்தில் கமல், ரஜினி இல்லை! - நடிகர் சிவாஜி சிறப்பு பேட்டி

சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஒரு தேசிய கட்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருந்தார்.

 அதாவது, வரும் 2019ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தென்னிந்தியாவில் காலூன்ற, ஒரு தேசிய கட்சி ‘ஆபரேஷன் திராவிடம்’ எனும் பெயரில் மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், இதில் தமிழகம், கேரளாவிற்கு ஆபரேஷன் ‘ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவிற்கு ஆபரேஷன் ‘கருடா’, கர்நாடக மாநிலத்திற்கு ஆபரேஷன் ‘குமார்’ என பெயர் சூட்டி, இதற்காக ரூ. 4800 கோடி நிதி ஒதுக்கி தென் மாநிலங்களில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த உள்ளதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், புதிய கட்சிகள், உட்கட்சி பூசல்கள், நடிகர்களின் வருகை, மாநில பிரச்சினைகள் போன்றவை தலைதூக்கும் எனவும் இவர் கூறியிருந்தார். இவரது குற்றச்சாட்டிற்கு பிறகு, ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில், இது உண்மையாக இருக்குமா ? இவருக்கு இந்த தகவல்கள் எப்படி தெரியும் ? இந்த ஆபரேஷன் திராவிடம் திட்டத்தில் யார், யார் உள்ளனர்? அந்த தேசிய கட்சி தென்னிந்தியாவில் காலூன்ற வேறு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போகிறது? இதில் சம்மந்தப்பட்ட நடிகர்கள் யார் ?.. போன்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு விடை காணும் விதத்தில் நேரடியாக நாம் நடிகர் சிவாஜியிடமே கேட்டோம். இதில் அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவாஜியை முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். முதலில் பிடிகொடுக்காமல் பேசினார். நாம் பத்திரிகையாளர்தானா எனும் சந்தேகம் அவரிடம் இருந்தது. அவரது சந்தேகத்தை தீர்த்து வைத்தோம். அதன்பின் அவர் பேட்டி கொடுக்க ஒப்புக்கொண்டார். பேட்டியின்போது, முதலில் அவர் கூறியது.. “சார் இதுவே என்னுடைய கடைசி பேட்டியாகக்கூட இருக்கலாம். என்னை 24 மணி நேரமும் சிலர் கண்காணித்து வருவது எனக்கு தெரிகிறது. ஆபரேஷன் திராவிடம் குறித்து ஊடகங்களில் வந்த செய்திக்கு பின்னர், என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பல தொலைபேசி மிரட்டல்கள், சில நேரடி மிரட்டல்கள் போன்றவை இருந்து வருகிறது. ஆயினும் தென்னிந்தியாவில் பிறந்த நான், இந்த மாநில மக்களின் நலன் கருதியே ‘ஆபரேஷன் திராவிடம்’ குறித்து எனக்கு தெரியவந்த ரகசியங்களை வெளியிட்டேன். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால், மக்கள் அதனை புரிந்து கொண்டு ‘அந்த கட்சி’ குறித்த செயல்பாடுகளை அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்” என கூறினார். அவரது பேட்டியில் இருந்து..

ஆபரேஷன் திராவிடம் குறித்த ஒரு தேசிய கட்சியின் ரகசிய திட்டம் குறித்து உங்களுக்கு எப்படி தெரியும். உங்களுக்கு இதனை யார் கூறியது ?

எனக்கு இத்திட்டம் குறித்து கடந்த கடந்த ஆண்டே தெரியும். நான் ஆந்திர மாநில பிரிவினையின் போது, மாநிலத்தை பிரிக்க கூடாது என சினிமாத்துறையை விட்டுவிட்டு, காங்கிரஸுக்கு எதிராக பாஜகவில் சேர்ந்தேன். பிறகு ஒருங்கிணைந்த ஆந்திராவிற்காக ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். தற்போதைய துணை குடியரசு தலைவரான வெங்கய்ய நாயுடுவுடன் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டேன். டெல்லிக்கு சென்று தங்கி இது குறித்து பல விவாதங்களின் பங்கேற்றேன். அப்போது சில பாஜகவினருடன் நட்பு பலப்பட்டது. 2014-ம் ஆண்டில், மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், மீண்டும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமெனவும் முதலில் போராடினேன். இந்த சமயத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கல்யாண் ஜி என்பவர் எனக்கு பழக்கமானார். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூரில் வசித்து வந்தார். இவர் அரசு சார்ந்த சில ரகசிய ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். இது இவரது இயற்பெயரா என்பது கூட எனக்கு தெரியாது. இவர் மூலம், முதலில் ஆபரேஷன் கருடா எனப்படும் ஆந்திரா குறித்த ரகசியங்கள் தெரியவந்தது. அதன் பின்னர் படிப்படியாக ’ஆபரேஷன் திராவிடம்’ எனும் மாபெரும் திட்டம் தெரியவந்தது. இது குறித்து நான் சென்ற ஆண்டே கூறினேன். ஆனால் யாரும் இதனை நம்பவில்லை.

இந்த ‘ஆபரேஷன் திராவிடம்’ திட்டத்தின்படிதான் இப்போது தென்னிந்தியால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் நடக்கிறதா ?

ஆம். இத்திட்டம் எனக்கு தெரிந்தது முதல், நான் ஆந்திரா மட்டுமல்லாது, தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசியலையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பல திருப்பங்களுடன் ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநில அரசியல்கள் நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்குவதற்குள் தெலங்கானா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இத்திட்டம் தீவிரமடையும் என கருதுகிறேன். இதில் அதிகமாக ஆந்திரா குறித்து நான் அறிந்து கொண்டேன். ஆந்திரா விவகாரத்தில் ஒரு புதிய கட்சி, எதிர்க்கட்சிகளை அந்த தேசிய கட்சி பகடை காய்களாக பயன்படுத்தி ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. ஆளும்கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு குறையும்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிறகு எதிர்கட்சி தலைவர் ஆந்திராவில் ஏதோ ஒரு இடத்தில் கூலிப்படை ஆட்களால் தாக்கப்படுவார். அதன் பின்னர், ஆந்திராவில் கலவரம் உண்டாகும். இதனை தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு பிரச்சனை தலைதூக்கும். பின்னர், இதனை காரணம் காட்டி வரும் செப்டம்பர் 1-ம் தேதி ஆந்திர மாநில ஆட்சி கலைக்கப்படும்.

இதனை தொடர்ந்து, புதிய கட்சியும், எதிர்கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் இணைந்து அந்த தேசிய கட்சி தேர்தலை சந்திக்கும். பின்னர், புதிய கட்சியின் தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவிகொடுக்கப்படும். எதிர்கட்சி தலைவர் மீது ஏற்கனவே உள்ள வழக்குகள் மூலம் அவர் கைது செய்யப்பட்டு சசிகலா போல் சிறைக்கு அனுப்பபடுவார். இதனை தொடர்ந்து, அந்த இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டு, அந்த தேசிய கட்சியில் இணைவார்கள்.

பின்னர், அந்த தேசிய கட்சியில் உள்ள ஆந்திராவை சேர்ந்த ஒரு மூத்த தலைவர் ஆந்திராவின் முதல்வராவார். இதுதான் ஆந்திராவை பொருத்தமட்டிலும் ‘ஆபரேஷன் கருடா’வின் திட்டம்.

அப்படியானால், தமிழகத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆபரேஷன் ராவணா’ திட்டத்தின்படி என்ன நடக்கும் ?

ஆந்திராவில் திட்டமிட்டபடியே சிறிய மாறுதல்களுடன் ‘ஆபரேஷன் ராவணா’ தமிழகத்தில் அமல்படுத்தப்படும். இத்திட்டம் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதே தொடங்கியதாக நினைக்கிறேன். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததுள்ளது. அதிமுக 2 அணிகளாவும், அதன்பின்னர், 3 அணிகளாகவும் பிரிந்தது. இதில் 2 அணிகள் ஒன்று சேர்க்கப்பட்டன. கட்சிகளுக்குள் உட்பூசல் ஏற்பட்டு இன்று வரை அது முடிவுக்கு வரவில்லை. நடுவே இடைத்தேர்தலும் நடந்தது. ஆனால், ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. பின்னர், கமல், ரஜினி போன்றோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அந்த கட்சி உருவாக்கி உள்ளது. இதனிடையே 2ஜி வழக்கில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வருகிறது. ஆனால், எனக்கு தெரிந்தவரை, நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகி யோர் இந்த ‘ஆபரேஷன் ராவணா’ வில் இல்லை.

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த திட்டம் மூலம் என்ன நடக்கும் ?

கர்நாடகாவில் ‘ஆபரேஷன் குமார்’ என பெயரிடப்பட்டுள்ளது. குமாரசாமி அல்லது அனந்தகுமார் என்பதையே இவர்கள் ஆபரேஷன் குமார் என பெயர் சூட்டி இருக்கலாம். மேலும், கர்நாடகாவிலும் நடிகர்களை தேர்தல் களத்தில் இறக்க அந்த தேசிய கட்சி முடிவு செய்துள்ளது. அங்கும், தற்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் மூலம் இந்த ‘ஆபரேஷன் குமார்’ திட்டம் ரகசியமாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவிலும் சில நடிகர்களை அந்த கட்சி ஈர்த்து வருகிறது. அதன்படி ஆளும்கட்சிக்கு எதிராக அந்த தேசிய கட்சி தனது அரசியல் காய்களை நகர்த்தும்.

தமிழகத்தை பொருத்தவரை தற்போதைய சூழலில், கமல், ரஜினி இருவரும், அரசியல் தலைமையில் வெற்றிடம் இருப்பதால்தான் அரசியலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர்களால் இந்த ஆபரேஷன் திராவிடம் திட்டத்தை எதிர்கொள்ள இயலுமா ?

என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், போன்று இவர்களும் அரசியலில் சாதிக்க அதிக வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அரசியலுக்கு நடிகர்கள் வருவதற்கு முன், அந்த மாநில மக்கள் எந்தெந்த பிரச்சனைகளை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர் ? இதற்கு காரணம் என்ன ? குறிப்பாக விவசாயம், கல்வி, மருத்துவம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு நம் மாநிலத்தில் உள்ளது ? போன்ற அடிப்படையான விஷயங்களை தெரிவித்து கொள்வது மேலானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரச்சனை மிக முக்கியமாக இருக்கும். அதனை அறிந்து கொள்ள வேண்டும். அதை அறிந்து கொள்ள வேண்டுமானால், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்து கொள்வது மிக அவசியம். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்றோர் இதைத்தான் செய்தார்கள்.

நடிகர் ரஜினி ஒரு ஆஸ்திகர். ஆன்மீகவாதி. ஆதலால் ரஜினிக்கு பின்னால் பாஜக உள்ளது என சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

இது தவறு. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என கூற முடியுமா? ரஜினி தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அரசியல் களத்தில் இறங்குகிறார். இதை வைத்து, இவர் ஒரு மதவாதி எனவோ, பாஜகவை சேர்ந்தவர் எனவோ நினைக்க கூடாது. இவரை பாஜக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினி ஒரு சக்தி. மக்கள் செல்வாக்கு மிக்கவர். இவர் பாஜக வுடன் சேராமல் சுயமாக அரசியல் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கமல்ஹாசன் கொஞ்சம் கம்யூனிஸ்ட் மனோபாவம் கொண்டவர் என கருதுகிறேன். அவரும் இந்த ‘ஆபரேஷன் திராவிடம்’ திட்டத்தில் இல்லை.

தென்னகத்தில் இது போன்று ‘ஆபரேஷன் திராவிடம்’ எனும் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க ரூ. 4,800 கோடி போதுமானதா ?

இந்த ரூ. 4,800 கோடி பணம் கடந்த 2017லிருந்து படிப்படியாக பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் அந்த தேசிய கட்சிக்கு விசுவாசமாக பலர் செயல் பட்டு வருகின்றனர். அது நடிகர்களாக இருக்கலாம், ஒரு கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்களாக இருக்கலாம். புதிய கட்சியை தொடங்கியவர்களாக இருக்கலாம். அல்லது ஒரு மாநிலத்தின் எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளியாக கூட இருக்கலாம். இதுவே அந்த தேசிய கட்சியின் பார்முலா.

நீங்கள் வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி மூலம் தேர்தலை சந்திப்பீர்களா ?

இல்லவே இல்லை. எனக்கு புதிய கட்சியை தொடங்கும் எண்ணம் இல்லை. கடந்த 2014ம் ஆண்டே ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென முதன்முதலில் எனது போராட்டத்தை திருப்பதியில் தொடங்கினேன். நான் எப்போதும் நடிகன்தான். இவ்வாறு நடிகர் சிவாஜி தெரிவித்தார். நடிகர் சிவாஜி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் குண்டூர் மாவட்டம், நரசராவ் பேட்டையாகும். பட்டப்படிப்பு முடித்த பின்னர், இவர் சினிமாவில் ஆர்வம் இருந்ததால் கடந்த 1998 முதல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவருக்கு சாய் சுவேதா என்கிற மனைவியும், ஸ்ரீ வெங்கட் ஸ்ரீ சவுத்ரி என்கிற 2 மகன்களும் உள்ளனர். ஆந்திர மாநில பிரிவினையின்போது இவர் அரசியலில் குதித்தார். ஆந்திர மாநிலத்திற்காக போராடினார். பின்னர் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் இவர் பாஜகவில் இருந்து விலகி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி சில போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x