Last Updated : 18 Mar, 2018 07:20 PM

 

Published : 18 Mar 2018 07:20 PM
Last Updated : 18 Mar 2018 07:20 PM

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவு விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என கட்டளையிடுகிறார்கள் பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் நிறைவுரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார், காங்கிரஸ் கட்சயின் எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது:

பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு அரசியல் அமைப்பின் குரல். ஆனால், இந்த தேசத்தின் குரல் காங்கிரஸ் கட்சியாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் பாரதப்போரில் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய போர் குருஷேத்ரத்தில் ஏற்பட்டது.

இதில் கவுரவர்கள் அதிகாரம் தங்கள் பக்கம் இருப்பதனால் அகங்காரத்துடன் இருந்தார்கள். ஆனால், பாண்டவர்கள் மிகுந்த பணிவுடன் உண்மைக்காக போரிட்டார்கள். இதில் கவுரவர்கள் போல் ஆர்எஸ்எஸ். பாஜக கட்சி இருக்கின்றன. பாண்டவர்கள் போல், காங்கிரஸ் கட்சி இருக்கிறது. உண்மைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் களத்தில் போரிடுகிறது.

பாஜக அதிகார வேட்கையுடன் இருக்கிறது மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதற்காகவே அவர்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு கொலைக்குற்றத்தில் சிக்கியவரை பாஜக அதன் தலைவராக ஏற்றுக்கொள்ளும். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதுபோன்ற கொலைக்குற்றத்தில் சிக்கியவரை யாரையும் ஏற்காது.உண்மைக்காக மட்டுமே உழைக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் உண்மை பேசுவதில் இருந்து தடுத்துவிடமுடியாது.

பிரச்சினைகளில் மக்களை திசைதிருப்பும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். ஒரு விசயத்தில் இருந்து மற்றொரு விசயத்துக்கு மாறுகிறார். நாடாளுமன்றத்தில் கப்பார் சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டி)குறித்து பேசும்போதே யோகா குறித்து பேசுகிறார். கடந்த முறை நாங்கள் அமைத்த ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் தான் தேர்தலில் மக்கள் என்னை தோற்கவைத்தனர். இதை நான் மகிழ்ச்சியுடன் கூறவில்லை.

இந்த நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்து, பற்றுடன் இருக்கும் முஸ்லிம் மக்களை பாகிஸ்தானுக்கு செல்ல விருப்பமில்லாதவர்களை, இங்கிருந்து புறப்படுங்கள் என்று பாஜகவினர் பேசுகிறார்கள்.

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ்மொழியை மாற்ற முயன்று, வேறொன்றை திணிக்க நினைக்கிறார்கள். வடகிழக்கு மக்களிடம் உங்களின் உணவு பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள், உடையை சரியாக அணியுங்கள் என்று பாஜகவினர் பெண்களிடம் கட்டளையிடுகிறார்கள்.

பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து போராடவில்லை. அவர் தன்னைத் தானே கறைபடுத்திக் கொண்டுவிட்டார். ஊழல்வாதிகளாலும், அதிகாரம் படைத்தவர்களாலும் நாட்டு மக்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

மோடி என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது தெரியுமா. இந்த நாட்டில் மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கும், நாட்டின் பிரதமருக்கும் இடையே ரகசிய கூட்டையும், உறவையும் ஏற்படுத்தித் தருவதாகும்.

எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை குறித்து யாரேனும் பேசினால் கொல்லப்படுவீர்கள் என மிரட்டுகிறார்கள். மக்களிடையே அச்சத்தை பாஜக பரப்புகிறது. பத்திரிகையாளர்கள் அச்சப்படுகிறார்கள். வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர், மக்களிடம் வந்து நீதிகேட்டு பேட்டி கொடுத்தனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் மற்ற நிறுவனங்களுக்கும் மதிப்பு அளிப்போம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்போ அனைத்தும் காலி செய்துவிட்டு தங்கள் இயக்கம் மட்டுமே இருக்க நினைக்கும். இந்த நாட்டை காங்கிரஸ் கட்சிதான் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.

காங்கிரஸ் கட்சியை மாற்றங்களை கொண்டுவர விரும்புகிறேன். மூத்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையிலான சுவரை உடைப்பதுதான் முதல்பணியாகும். மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து, அன்பு என்ற கருவியால் சுவற்றை உடைப்பேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x