Published : 28 Mar 2018 12:07 PM
Last Updated : 28 Mar 2018 12:07 PM
கிரிமினல் வழக்குகளில் 6 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைக்காமல் சமூகப் பணி செய்ய வைக்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைகளில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், ரிமான்ட் செய்யப்பட்டவர்கள் ஆகியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சிறையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்படுகிறார்கள் இதைத் தவிர்க்க இந்த அறிவுரையை அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 382 சிறைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கைதிகள் இருக்கிறார்களா, போதுமான அளவு போலீஸார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா, கைதிகள் வாழும் சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை உச்ச நீதிமன்றம் நியமித்து இருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோக்கூர் தலைமையில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன் கவுரவ் அகர்வால் தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் நாட்டில் உள்ள 240 சிறைகளில் கைதிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக 150- சதவீதம் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சிறை பராமரிப்புக்கு 77 ஆயிரம் பணியிடங்கங்கள் இருக்கையில், அதில் 24ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருக்கின்றன.
குறிப்பாக தமிழகம், உத்தரப்பிரதேச சிறைகளில் கைதிகளை பராமரிக்கும் காவலர்களுக்கு இடையிலான விகிதாச்சாரம் மிகமோசமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 92 ஆயிரம் கைதிகளை கண்காணிக்க, 5 ஆயிரம் காவலர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோன்று, தமிழகத்தில் 13 ஆயிரம் கைதிகளை பராமரிக்க 4 ஆயிரம் காவலர்கள் மட்டுமே இருக்கிறார்கள்
இதில் 18 சிறைகள் பெண்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், சிறைகளில் பெண் கைதிகளை வைத்திருக்க தனியாக இடங்களும், சிறைகளும் இருக்கின்றன.
பெண் கைதிகளை பராமரிப்பதிலும், கண்காணிப்பதிலும் போதுமான பெண் காவலர்கள் இல்லை. குறிப்பாக பெண் கைதிகள் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் தண்டனையை அனுபவிப்பவர்களுக்கு, வீடுகளைப் போன்ற சிறைகள் அமைக்கப்பட வேண்டும் அதுவும் இல்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோக்கூர் தலைமையில் நீதிபதி தீபக் குப்தா கூறுகையில், விசாரணைக் கைதிகள் கூட சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் உண்மையில் கைதி செய்ய அவசியம் இல்லாத நிலையில் சிறையில் இருப்பவர்கள்.
அவர்கள் கைது செய்ய அவசியம் இல்லாத நிலையில் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ரிமான்ட் செய்யத் தேவையில்லை, ஆனாலும், ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்திக்க அதிகமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும். குறிப்பாக சூழல் காரணமாக தவறு செய்து முதல்முறையாக சிறைக்குள் வந்திருக்கும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன், வழக்கறிஞருடன் செல்போனில் பேசவும், வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் உரையாடவும் அனுமதிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கிரிமினல் குற்றங்களில் 6 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை சிறை தண்டனை பெற்று இருக்கும் குற்றவாளிகளை சமூகப்பணி செய்ய அரசு பயன்படுத்தலாம்.
சிறையின் செயல்பாடுகள், அதில் உள்ள வசதிகள் குறித்து மாநில சட்டச்சேவை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சிறையில் சீரமைப்பு பணிகள், சீர்திருத்தங்கள் செய்ய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT