Published : 31 Mar 2018 08:30 AM
Last Updated : 31 Mar 2018 08:30 AM
நாடு முழுவதும் சிறைச்சாலைகள் 600 சதவீதத்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டு நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 1300 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை குறித்து உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 150 முதல் 609 சதவீதம் வரை கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள் எம்.பி.லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியது.
சிறைக் கைதிகளுக்கும் மனித உரிமை உண்டு. அவர்களை விலங்குகளைப் போல் அடைத்து வைப்பதை அனுமதிக்க முடியாது. இப்படி அடைத்து வைத்தால் சிறை சீர்திருத்தத்தை எப்படி அமல்படுத்த முடியும். அதுபற்றி பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அவர்களை முறையாக அடைத்து வைக்க முடியாவிட்டால், அவர்களை விடுவிக்க வேண்டும். மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சிறு குற்றங்களுக்காகவும், ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்தாமல் பலர் விசாரணைக் கைதிகளாக உள்ள விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
புதிய செயல் திட்டம்
இதைக்கேட்ட நீதிபதிகள் விசாரணைக் கைதிகளை ஆய்வு செய்து விடுதலை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் என்ன செய்கிறது? இந்த ஆணையம் ஒழுங்காக செயல்படவில்லை என்பதையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது. எனவே, இந்த ஆணையம் ஒழுங்காக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயல்திட்டம் குறித்து மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் தங்கள் கருத்துகளை தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் தாக்கல் செய்யாவிட்டால், புதிய செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக கருதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 77,230 பணியாளர்கள் இருக்க வேண்டும். இதில், கடந்த 2017 டிசம்பர் நிலவரப்படி 24,588 பணியாளர்கள் (30 சதவீதம்) காலியாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்ப சிறைத்துறை டிஜிபி-க்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திறந்தவெளி சிறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்த வரைவுத் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்ற தகவலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மே மாதம் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT