Published : 23 Mar 2018 03:29 PM
Last Updated : 23 Mar 2018 03:29 PM
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணைத் திருமணத்துக்கு சிலமணிநேரத்துக்கு முன் அவரின் தந்தையே குத்திக்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம், அரீகோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (வயது 22). இவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் டயாலிசிஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், ஆதிராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுக் காதலாக மாறியது. இந்த இளைஞர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டனர்.
ஆனால், ஆதிராவின் தந்தை ராஜன் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் குடும்பத்துக்குள் தந்தைக்கும், மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதிராவும், அந்த இளைஞரும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது ஆதிராவின் தந்தை தானே திருமணம் செய்து வைப்பதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கோழிக்கோடு நகரில் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருநத்து. திருமண ஆசையோடு ஆதிரா மணப்பெண் மண்டபத்தில் காத்திருந்தார். ஆனால், தொடக்தத்தில் இருந்தே இந்தத் திருமணத்தை மனசுக்குள் வெறுத்து வந்த ராஜன் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார்.
இதற்காக மது அருந்திவிட்டு அதிகமான போதையில் நேற்று இரவு திருமண மண்டபத்துக்கு ராஜன் வந்தார். விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தனது மகள் ஆதிராவுடன் திருமணத்தை நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததையடுத்து, தான் வைத்திருந்த கத்தியால் மகள் என்றும் பாராமல் ஆதிராவைக் குத்திக் கொலை செய்தார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதிராவை தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ராஜனைக் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்பி தீபேஷ் குமார் பெஹாரா கூறுகையில், ''ஆதிராவைக் கொலை செய்ததையடுத்து, ராஜன்மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, எந்த நோக்கத்தில் கொலை செய்தார், ஆணவக் கொலையா என்பது குறித்து விசாரணைக்குப் பின் தெரியும்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT