Last Updated : 04 Mar, 2018 01:29 PM

 

Published : 04 Mar 2018 01:29 PM
Last Updated : 04 Mar 2018 01:29 PM

கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை இறுகுகிறது: மும்பை சிறையில் இந்திராணி முகர்ஜியின் முன் நிறுத்தி விசாரணை

 

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக மும்பை அழைத்துச் சென்றனர்.

மும்பை பைகுல்லா சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் நிறுத்தி நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக இருக்கும் அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது.

மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி,வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரம் கிடைத்ததையடுத்து லண்டனிலிருந்து சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு பொருளாதாரப் பிரிவு அதிகாரிகள் கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்படுவதாவது, ''கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம். இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக ஷீனா போரா வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரின் வாக்குமூலம் அமைந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இருவரும் அன்னிய முதலீடு தொடர்பாக அரசு ஒப்புதல் பெறுவது குறித்து 2007-ம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நார்த் பிளாக் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். அப்போது அவர் தனது மகனின் தொழிலுக்கு உதவுமாறு கோரியுள்ளார். அதன்படி, கார்த்தி சிதம்பரத்தை இருவரும் சந்தித்துப் பேசியபோது, அவர் 10லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கேட்டதாக இந்திராணி முகர்ஜி மாஜிஸ்திரேட் முன் கடந்த மாதம் 28-ம் தேதி அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுக்குப் பின் 7 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சமாக கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆதலால், மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் தனித்தியாக நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி விசாரிக்க முடிவு செய்துள்ளோம்'' என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x