Published : 12 Mar 2018 11:56 AM
Last Updated : 12 Mar 2018 11:56 AM
மகராஷ்டிராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகளின் மாபெரும் பேரணி மும்பையில் இரவு முழுவதும் நடந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.
இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பையை நோக்கி புறப்பட்டனர். இந்தப் பேரணியை அகில இந்திய கிஸான் சபா (ஏஐகேஎஸ்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசிக்கில் இருந்து புறப்பட்ட பிரம்மாண்ட விவசாய பேரணி ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்தடைந்தது. நள்ளிரவிலும் மக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வண்ணம் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டப்பேரவையை முற்றுகையிட உள்ளனர். விவசாயிகளின் இந்த பேரணியால் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக குடிமக்கள்:
ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்தடைந்த விவசாயிகளை அந்நகர மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்றதாகவும், அவர்களில் 100 பேர் இந்தப் பேரணியில் பங்கேற்றதாகவும் மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விவசாயிகளின் இந்த மாபெரும் போராட்டம் குறித்து ஸ்னேகல் கூறும்போது, "நாங்கள் எப்போதுமே விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களை மதிக்க வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோம்" என்றார்.
சிவசேனா ஆதரவு:
சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்ரே இந்தப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, "நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். சிவசேனாவால் இந்ததருணத்தில் என்ன செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.
நம்முடைய நிறம் என்ன என்பது முக்கியம் அல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள். நமது கோரிக்கைகள் ஒன்றுதான். சிவசேனா பிற கட்சிகளை போல் கிடையாது. சிவசேனா மக்களின் பிரச்சினையை கவனிக்கும்" என்று என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT