Published : 15 Mar 2018 08:16 AM
Last Updated : 15 Mar 2018 08:16 AM
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக படிப்படியாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்வரும் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று காலை காணொலி காட்சி மூலம் தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
தெலுங்கு தேசம் கட்சி இன்னமும் பாஜகவுடன் தோழமை கட்சியாகவே உள்ளது. அப்படி இருக்கையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி.க்களை சந்திக்க, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்களை அவர் சந்தித்துள்ளார். பாஜகவுக்கு தோழமை கட்சி தெலுங்கு தேசமா ? அல்லது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியா? இது கூட்டணி தர்மம் அல்ல.
மக்களே எஜமானர்கள். அவர்களது நல்வாழ்வே நமக்கு முக்கியம். அதற்காகத்தான் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோருகிறோம்.சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை படிப்படியாக தீவிரப்படுத்துவோம். இது நம் உரிமை. இதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மேலும், மாநிலத்தில் தொகுதி விஸ்தரிப்பு குறித்தும் மத்திய அமைச்சகத்தில் நமது கட்சி எம்பி.க்கள் விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT