Last Updated : 16 Mar, 2018 08:44 PM

 

Published : 16 Mar 2018 08:44 PM
Last Updated : 16 Mar 2018 08:44 PM

நிர்பயாவின் தாயை ஆபாசமாக வர்ணித்த முன்னாள் போலீஸ் டிஜிபி?-சர்ச்சைக்குள்ளாகும் பேச்சு

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து நிர்பயா கொல்லப்பட்டார். இவரின் தாய் ஆஷா தேவியை ஆபாசமாக வர்ணித்து முன்னாள் போலீஸ் டிஜிபி சமீபத்தில் பேசியதாக வெளியான செய்தி சர்ச்சையாகி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி நிர்பயா (வயது 23). கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது நண்பருடன் சாலையில் நடந்து சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரத்தில் படுமோசமாகக் காயமடைந்த நிர்பயாவை சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். நிர்பயாவின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியது.

நிர்பயாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரின் தாய் ஆஷா தேவி பல நீதி போராட்டங்களை நடத்தினார். இறுதியில் 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 8-ம்தேதி உலக மகளிர் தினத்தையொட்டி பெங்களூரு நகரில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியும் கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி சாங்கிலியானாவும் கலந்து கொண்டனர்.

அப்போது நிர்பயாவின் தாய் ஆஷாதேவி குறித்து, முன்னாள் போலீஸ் அதிகாரி சாங்கிலியானா வரம்பு மீறிப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் போலீஸ் டிஜிடி சாங்கிலியானா பேசுகையில், ''ஆஷா தேவி இந்த வயதிலும் என்ன உடல்கட்டுடன் இருக்கிறார் பாருங்கள். அப்படியென்றால், நிர்பயா எந்த அளவுக்கு அழகாக இருப்பார் என கற்பனை செய்துபாருங்கள'' என பேசியதாக செய்தி வெளியானது.

இது குறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ''என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, உடல்அழகு குறித்து பேசியதற்கு பதிலாக என்ன மாதிரியான போராட்டத்தை நானும், நிர்பயாவும் சந்தித்தோம் என அவர் பேசி இருக்க வேண்டும். இது நம்முடைய சமுதாயத்தில் மக்களின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது'' என வேதனையுடன் தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் போலீஸ் டிஜிபி சாங்கிலியானாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ''நான் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும்தான் பேசினேன். என் பேச்சு அனைத்தும் வரம்புக்குள்தான் இருந்தன. ஆனால், சிலர் நான் பேசியதை தவறாகத் திரித்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாயை முன்னாள் போலீஸ் டிஜிபி ஆபாசமாக வர்ணித்துப் பேசியுதாக வெளியான செய்தி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், கடும் கண்டனத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x